யோகத்தினால் அச்சம் நீங்கும்

நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே. – (திருமந்திரம் – 692)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தை தொடர்ந்து பயிலும் யோகிகள், மேன்மை மிகுந்த பேரொளியைக் காண்பார்கள். அந்தப் பேரொளியின் வெளிச்சத்தையே தாயகமாகக் கொண்டு அங்கே வசிக்க விரும்புவார்கள். அவர்கள் யோகத்தின் போது தமது அகத்தில் உள்ள குழப்பங்களை ஆய்ந்து, தெளிந்து அச்சம் நீங்குவார்கள். எப்போதும் அச்சத்திலேயே இருந்த அவர்களது மனம் அச்சம் நீங்கி பேரொளியைக் காணும்.


பூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்!

காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு வுன்னிடை மெய்த்திடு மானனாய்
நாமரு வுமஒளி நாயக மானதே. – (திருமந்திரம் – 691)

விளக்கம்:
பூ மலரும் போது அதில் வாசனை தோன்றுகிறது. அந்தப் பூ வாடும் போது வாசனை மறைந்து விடும். அது போலத்தான் நாம் பிறக்கும் போது இந்த உலகம் நமக்குள் தோன்றுகிறது, நாம் மறையும் போது இந்த உலகம் நமக்குள்ளேயே மறைந்து விடும். வசித்துவம் பெற்று, தீமைகளில் இருந்து நம்மைக் காக்கும் தத்துவம் கைகூடும் போது இந்த உண்மையை உணர முடியும். இந்த உண்மையை நமக்கு உணர்த்துபவன் நம் தலைவனான சிவபெருமான். வசித்துவம் பெற்று உலகம் இயங்கும் விதத்தைப் புரிந்து கொள்ளும் போது, நாம் அறிவொளி மிகுந்தவராக இருப்போம்.


பொன்னான தருணங்களைக் காணலாம்

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே. – (திருமந்திரம் – 690)

விளக்கம்:
இத்தனை காலம் கல்லில் செய்த கொடி போல காமுகனாக இருந்திருக்கிறோம். அட்டாங்கயோகப் பயிற்சி நம்மை நல்லவிதமாக மாற்றுகிறது. நற்கொடியாகிய சக்தியைக் கண்டு ஓராண்டு குண்டலினிப் பயிற்சியாகிய யாகத்தைத் தொடர்ந்து செய்து வந்தால், இவ்வாழ்க்கையின் பொன்னான தருணங்களைக் காணலாம். அதுவே வசித்துவம் ஆகும்.


வசித்துவம் தரும் சிறப்புகள்

தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
புன்மைய தாகப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே. – (திருமந்திரம் – 689)

விளக்கம்:
மென்மையான மெய்ப்பொருளைக் கண்டு வசித்துவம் எனும் சித்தி பெறும்போது, நாம் சூரியனைப் போல் பிரகாசமாக இருந்து அனைவருக்கும் நன்மை செய்யும் தன்மை பெறுவோம. அசுத்தமான ஐம்புலன் ஆசைகள் நம்மை விட்டு அகன்று விடும். நன்மை தரும் நற்கொடியாகிய சிவசக்தியைக் காணலாம்.


வசித்துவம் பெறலாம்!

மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாந்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே. – (திருமந்திரம் – 688)

விளக்கம்:
ஈசத்துவம் என்னும் சித்தி பெற்று மெய்ப்பொருளை உணரலாம் என்பதைப் பார்த்தோம். மெய்ப்பொருளை உணர்வதால் ஏற்படும் நற்பலன் என்னவென்றால் அட்டமாசித்திகளில் தலை சிறந்த சித்தியான வசித்துவம் கைகூடும். வசித்துவம் கைகூடும் போது, எல்லா உயிர்களிலும் கலந்திருக்கும் தற்பொருளாகிய சிவபெருமானின் தன்மையைப் பெறலாம்.


மென்மையான மெய்ப்பொருளைக் காணலாம்!

தன்மைய தாகத் தழைத்த கலையினுள்
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்பொருள் காணுமே. – (திருமந்திரம் – 687)

விளக்கம்:
யோகநெறியில் நின்று அதன் தன்மையை உணர்ந்து பயிற்சி செய்யும் போது, யோகக்கலை நம்முள் தழைக்கும். அந்நிலையில் ஒரே மெய்ப்பொருள் தான் ஐம்பூதங்களாகப் பேதப்பட்டு நமக்குக் காட்சி தருவது புரியும். ஐம்பூதங்களின் பேதங்களைக் கடந்து அனைத்தையும் ஒரே மெய்ப்பொருளாகப் பார்த்து ஓராண்டு பயிற்சி செய்து வந்தால் மென்மையான மெய்ப்பொருளை முழுமையாகக் காணலாம். அதுவே ஈசத்துவம் எனப்படும் அட்டமாசித்தியாகும்.


யோகத்தினால் வல்லவன் ஆகலாம்!

தானே படைத்திட வல்லவ னாயிடுந்
தானே யளித்திட வல்லவ னாயிடுந்
தானே சங்காரத் தலைவனு மாயிடுந்
தானே யிவனெனுந் தன்மைய னாமே. – (திருமந்திரம் – 686)

விளக்கம்:
அட்டமாசித்தியான ஈசத்துவத்தைப் பெறும் போது நமது வாழ்க்கை விதி வழி செல்லாது நாம் நினைத்தபடி அமையும். நாமே நமது வாழ்க்கையில் ஒரு காரியத்தைத் திட்டமிடலாம், வெற்றிகரமாக நடத்தலாம், நல்லபடியாக நிறைவு செய்யலாம். விதியின் குறுக்கீடு இருக்காது. அட்டாங்க யோகத்தில் நின்று அட்டமாசித்தியைப் பெறுபவர்களுக்கே இதெல்லாம் சாத்தியம்.


யோகத்தினால் குளிர்ந்த தன்மை பெறுவோம்!

ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ னாமே. – (திருமந்திரம் – 685)

விளக்கம்:
தொடர்ந்த தியானத்தில் சந்திரகலை கைகூடும் போது, மனம் நிலவைப் போன்ற குளிர்ச்சியைப் பெறும். நாமும் சந்திரனைப் போன்ற ஒளி கொண்டவராக இருப்போம். அட்டமாசித்தியான ஈசத்துவத்தைப் பெறும் போது நாமும் சந்திரனைப் போல உலகத்துக்கே குளிர்ந்த நன்மை அளிப்பவராய் ஆவோம்.


ஈசத்துவம்!

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாங்
கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற்
பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே. – (திருமந்திரம் – 684)

விளக்கம்:
சதாசிவத்தைத் தேடி உச்சிக்குச் செல்லும் நாயகியான குண்டலினி, நிலைத்து உச்சியிலேயே நிற்கும் போது, ஐம்பூதங்கள் இயங்கும் விதத்தைப் புரிந்து கொள்ளலாம். அதனால் ஏற்பட்ட தெளிவுடன் தொடர்ந்து ஓராண்டு தியானித்து வந்தால் மிகப் பழமையான ஈசனின் தத்துவம் புரிய வரும். அதுவே ஈசத்துவம் என்னும் சித்தியாகும்.


பிராகாமியம்!

ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னே யுடையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடெளி தாநின்றே. – (திருமந்திரம் – 683)

விளக்கம்:
நம்மிடம் மூலாதாரத்தில் ஒரு விளக்கொளி உள்ளது. அதைத் தூண்டி விட்டு, சுடர் மிகச் செய்யும் வழி தெரியாமல் இருக்கிறோம். நறுமணம் மிகுந்த அந்த குண்டலினி என்னும் விளக்கொளியைத் தூண்டி விட்டு அதன் சுடரை உணர்ந்தவர்கள், பெருஞ்சுடரான அந்த சிவபெருமானை எளிதாக உணரலாம்.