குழந்தையின் இயல்பு தீர்மானமாகும் விதம்

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே.  – (திருமந்திரம் – 458)

விளக்கம்:
ஆண் பெண் கூடலின் போது ஆணின் சுக்கிலம் எதிர்த்துச் சென்றால், பிறக்கும் குழந்தை உருத்திரனைப் போல தாமச குணம் மிகுந்ததாக இருக்கும். கூடலின் போது பெண்ணின் சுரோணிதம் எதிர்த்துச் சென்றால், பிறக்கும் குழந்தை திருமாலைப் போல சத்துவ குணம் மிகுந்ததாக இருக்கும். ஆணின் சுக்கிலமும், பெண்ணின் சுரோணிதமும் சம அளவில் கூடினால், பிறக்கும் குழந்தை பிரமனைப் போல இராசத குணம் மிகுந்ததாக இருக்கும். இவற்றுள் சத்துவ குணம் மிகுந்த குழந்தை, பின்னாளில் பேரரசை ஆளும்.


கருவில் அமையும் விஷயங்கள்!

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே.  – (திருமந்திரம் – 457)

விளக்கம்:
கருவில் அமைய வேண்டியவை இவை எனத் திருமூலர் சொல்கிறார். போகின்ற எட்டு – சுவை, ஒளி, பரிசம், ஓசை, வாசனை, மனம், புத்தி, அகங்காரம் ஆகியன. புகுகின்ற பத்து – பிராணனன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் ஆகியன. புகுகின்ற எட்டு – காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், துன்பம், அகங்காரம் ஆகியன. ஒன்பது துளைகள் – கண்கள், செவிகள், நாசித்துளைகள், வாய், கருவாய், எருவாய்த் துளைகள் ஆகியன. இவற்றுடன் குண்டலினியும், பிராணன் என்னும் புரவியும் அமைய வேண்டும். இவையனைத்தும் கருவினில் சரியாகப் பொருந்தாவிட்டால், பன்றியைப் போன்ற இழிவான பிறவியாகி விடும்.


தனஞ்சயன் என்னும் வாயு

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே.  – (திருமந்திரம் – 456)

விளக்கம்:
பூவின் மீது தவழும் காற்று, அதன் மணத்தை தான் போகும் இடமெல்லாம் சென்று பரப்புகிறது. அது போல ஆண் பெண் கூடலின் போது, ஒரு குறிப்பிட்ட காலத்தில்,  தனஞ்சயன் என்ற வாயு ஆணின் விந்தோடு சென்று பெண்ணின் கருப்பையில் அவிழ்கிறது. இதுவே கரு உருவாகக் காரணமாக அமைகிறது.

தனஞ்சயன் என்னும் வாயு தச வாயுக்களில் ஒன்றாகும். தச வாயுக்கள் என்பன – பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் ஆகியவை ஆகும்.


கரு உருவாகும் விதம்

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.  – (திருமந்திரம் – 455)

விளக்கம்:
ஆண் பெண் கூடலின் போது, விரிகின்ற யோனியில் ஆண்குறியின் சுக்கிலம் விழுகிறது. அவ்விதம் சேரும் சுக்கிலத்தோடு ஐந்து பூதங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கன்மேந்திரியங்கள் ஆகியவை உருவாகும் புதிய உயிரின் பருவுடலுக்குக் காரணமாகச் சேர்கின்றன. அந்தப் பருவுடல் வளரத் தேவையான இதர தன்மாத்திரைகளும், அந்தக்கரணங்களும் அந்த உயிரின் நெற்றியிலும் உச்சந்தலையிலும் ஒளிரும் படியாகச் சேர்கின்றன.


உயிரின் விதி விந்திலேயே தீர்மானமாகிறது!

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.  – (திருமந்திரம் – 454)

விளக்கம்:
மெய்யுணர்வு பெற்ற ஞானிகளால் மட்டுமே நிலம் முதல் புருடன் வரை ஆன இருபத்தைந்து தத்துவங்களையும் அறிய முடியும். பெண்ணின் கருப்பைக்குள் புகும் முன்னரே, ஆணின் விந்தில் அந்த இருபத்தைந்து தத்துவங்களும் பொருந்தி இருக்கிறது. இந்த உண்மையை ஞானிகளைத் தவிர மற்றவர்கள் உணர மாட்டார்கள். ஆணின் உடலில் உள்ள விந்து ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ, பெண்ணின் கருப்பைக்குள் ஓடிச்சென்று விழுகிறது.


வினை தீர்க்கப் பிறந்திருக்கிறோம்!

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே.  – (திருமந்திரம் – 453)

விளக்கம்:
ஓர் உயிர் கருவாக இந்த பூமியில் உருவாகக் காரணம், தன்னுடைய முன் வினைகளைத் தீர்ப்பதற்காகவே! துன்பம் மிகுந்த இந்தத் துயர வாழ்க்கையின் ஆயுளையும், வாழ்க்கை முறையையும் நம் சிவபெருமானே அமைத்துக் கொடுக்கிறான். ஒரு தாய் தந்தையின் கூடலின் போதே பிறக்கப் போகும் உயிரின் விதி தீர்மானம் ஆகிவிடுகிறது.


கருவிலேயே துணையாக இருப்பவன்!

அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.  – (திருமந்திரம் – 452)

விளக்கம்:
தியானத்தினால் உணரக்கூடிய மூலாதாரத்தின் மேலே, நெருப்பும் நீரும் செறிந்துள்ள இடம் ஒன்று உள்ளது. அதுவே கரு உருவாகும் இடம். ஓர் உயிர் கருவாக உருவாகும் போது, ஞானமே உருவான நமது சிவபெருமான், தமது திருவடியை அங்கே பதிக்கிறான். தாம் முழுமையாக உருவாகும் வரை பொறுமையுடன் காத்திருக்கும் கருவான இனிய உயிரில் தானும் கலந்து நிற்கிறான் நம் இறைவன். கருவில் இருக்கும் அந்த உயிரைப் பத்து மாதங்களும் உடன் இருந்து காத்து அருள்பவன், நம் சிவபெருமானே!


கருவில் உயிரைக் காப்பவன்!

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே.  – (திருமந்திரம் – 451)

விளக்கம்:
ஓர் உயிரைக் கர்ப்பப்பையில் தோற்றுவிப்பவன் நம் சிவபெருமான். அந்த உயிர் தனது முந்தைய பிறவியில் விட்டுப் பிரிந்த இருபத்தைந்து தத்துவங்களையும் மறுபடியும் தோற்றுவிக்கிறான். அந்தத் தத்துவங்களை கருவில் உள்ள உயிருடன் சேர்க்கிறான். உயிரை உருவாக்கிய நம் சிவபெருமான் அந்த உயிருடன் கலந்திருந்து, அந்த உயிருக்குத் தேவையானவற்றைச் செய்து அருள்கிறான்.

இருபத்தைந்து தத்துவங்கள் – ஐம்பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், நான்கு அந்தக்கரணங்கள், ஒரு புருடன்.


நீரில் கலந்த பால் போல் நம்மில் கலந்திருக்கிறான்!

ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.  – (திருமந்திரம் – 450)

விளக்கம்:
இந்த உலகின் மொத்த வடிவமே சிவபெருமானின் திருவுருவமாகும். அதனால் அவன் உருவத்தை யாராலும் காண முடியாது. பூமி முதலான ஐந்து பூதங்களால் ஆன இந்த உடலில் சிவபெருமான் நீரில் கலந்த பால் போல, பிரிக்க முடியாதவாறு கலந்திருக்கிறான். அவனது அந்த அருள் தரும் தன்மையை நாம் மனச்சோர்வினால் மறக்கக்கூடாது. சிவபெருமான் நம் உடலிலும் உயிரிலும் கலந்திருக்கிறான் என்பதை நாம் எப்போதும் உணர்ந்திருந்தால், இடையறாத இன்பம் பெறலாம்.


ஞானமே வடிவானவன்!

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோத மாமே.  – (திருமந்திரம் – 449)

விளக்கம்:
சிவபெருமான் நம்முள்ளே ஒளி விடும் சோதியாகவும், நம் உயிருடன் பொருந்தி இருக்கும் உடலாகவும் விளங்குகிறான். விண்ணில் வாழும் தேவர்கள் விரும்பும் மேலான பொருளாகவும், இந்த மண்ணுலகில் வாழும் பக்தர்களால் புகழப்படும் திருமேனியனாகவும் அவனே விளங்குகிறான். மிகப்பெரிய ஞான வடிவமாக விளங்குபவன் நம் சிவபெருமான்.