பரமனை அணுகி நிற்போம்.

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
உலகின் உயிர்கள் அனைத்திலும் உடனாய் நின்று பரவி இருப்பவனை, அழிவற்ற தேவர்களால் ‘முற்றும் துறந்தவன்’ என வாழ்த்தப்படும் அந்த இறைவனை, நாள்தோறும் பக்கத்தில் இருப்பவர் கூட உணர முடியாத சிவபெருமானை அணுகி நின்று நான் தினமும் வழிபடுவேனே!

(உலப்பிலி – அழிவற்ற,  ஒக்க நின்றான் – கலந்து நின்றான், நக்கன் – முற்றிலும் துறந்தவன்,  புக்கு நின்று – அணுகி நின்று)

He who stands with all, Whom the immortal Devas
Adore as a pure one, even the people, who
Stand beside him daily, not knowing his Nature.
I Seek Him and Praise Him.

நினையாதவர்க்கும் அருள்பவன்!

மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
மனத்தில் தோன்றும் மாய நாடனான சிவபெருமான் நாம் மனத்தில் நினைப்பதை அறிவான் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. சிலர் இறைவன் தன்னிடம் அன்பாய் இல்லை என்று சொல்லுவார், ஆனால் இறைவன் தன் ஆளுமையிலிருந்து தப்ப நினைப்பவருக்கும் அருள் செய்கிறான்.

(இறைவன் தன்னை நினையாதவரையும் காத்து நிற்கின்றான்).

The Lord who rise inside our mind
He knows our thoughts, but we are not aware of it
A few may tell 'God is not loving me'
But the Lord saves those people too who are not seeking him.

எல்லாம் சிவமயம்

தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
தானே தன்னுடைய கடவுளாய் நிற்கின்றான். தான் வசிக்கும் மலைகளில் அவனே மலையாகவும் நிற்கின்றான். தனக்கு தானே சிவமயமாய் நிற்கின்றான். அந்த ஈசன் தனக்கு தலைவன் தானே ஆம்.

(இங்கே நிற்கும் என்று சொல்லப்படுவது அதன் தன்மையாய் உள்ளான் என எடுத்துக் கொள்ளலாம். அதாவது அவனே தலைவன், அந்த தலைவனின் தலைமைத் தன்மையும் அவனே. மலையில் இருப்பதும் அவனே, மலைக்கு அதன் தெய்வத் தன்மையை தருவதும் அவனே. சிவமயமாய் இருப்பது அவனே. அந்த சிவமயத்தன்மையும் அவனே. இதெல்லாம் எப்படி என்றால் அவன் தலைவனுக்கு தலைவனாய் இருப்பதால்).

Himself he stands as his Lord
Himself he stands as Mountain where he Resides
Himself he stands as His Pervasive Presence
Himself he is the God of Himself.

சிவன் நமக்கு நண்பன்

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்
ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
சிவபெருமான் தன்னை வணங்கி வாழ்த்த வல்லவரின் மனத்தில் அறிவுப் பேரொளியாய் தோன்றுவான். புனித தீர்த்தமானவனை, அந்த தீர்த்தங்களிலே திளைக்கின்ற ஈசனை துதித்தும் எம்பெருமானே என்று வணங்கியும் நட்பு கொண்டு அந்த ஈசனின் அருளப் பெறலாம்!

(ஆத்தம் செய்து – நட்பு செய்து)

Lord Siva, shining lamp of knowledge in Devotees' Heart,
He is the Holiness of Holy Water
We shall Praise and Worship 'OUR LORD'
Thus we attain his Grace, being friendly with Him.

பசுவை அழைக்கும் கன்று

வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே – (திருமந்திரம்)

விளக்கம்:
வானத்திலிருந்து தானே மழை பெய்வது போல இறைவனும் தானே வந்து அருள் செய்யட்டும் என்று தயங்கி சிலர் அழைக்க மாட்டார். கன்று தன் தாய்ப் பசுவை அழைப்பது போல் நான் என் சிவபெருமானை அழைக்கிறேன், ஞானம் பெறுவதற்காகவே.

Like the rain falling from sky
The GOD will descend himself - a few think so.
I call him as if the calf calling his mother
Seeking him the true knowledge.

நாமும் குபேரன் ஆகலாம்!

அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. – (திருமந்திரம்)

விளக்கம்:
அளகாபுரி வேந்தனான குபேரன் வட திசைக்குத் தலைவனாகவும், செல்வத்துக்கு அதிபதியாகவும் காரணம், அவன் சிவபெருமானை நோக்கிச் செய்த நிறைந்த தவம். அந்த தவத்தை நாமும் வடதிசை நோக்கி செய்வோம். அப்படிச் செய்வோரை ‘குபேரன் போல் நீயும் தலைவன் ஆவாய்’ என்ற சொன்ன என் சிவபெருமானை வணங்குகிறேன்.


தனக்கோர் தலைவன் இல்லாதவன்

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே. – (திருமந்திரம்)

விளக்கம்:
என்னால் வணங்கப்படும் இறைவனின் பேர் நந்தி. அவ்விறைவன் பொன்னாலே பின்னப்பட்ட சடையை பின்னால் உடையவன். நாம் வணங்கும் அந்த சிவனால் வணங்கப்படக்கூடிய தெய்வம் என்று உலகில் எதுவும் கிடையாது.


உயிரின் உயிரே!

அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. – (திருமந்திரம்)

விளக்கம்:
உலகின் அனைத்து உயிர்களுக்கும் மெய்ப்பொருளாய் இருப்பவனை, இந்த உலகின் படைப்பிற்கு வித்தாக இருப்பவனை, தன்னிடம் அடைக்கலமாய் சேர என்னை அனுமதித்தவனை, பகலும் இரவும் பணிந்து வணங்கி என் அறியாமை நீங்கப் பெற்றேனே.


சேயினும் நல்லன்

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. – (திருமந்திரம்)

விளக்கம்:
தாழ்ந்த சடை கொண்ட சிவபெருமான் தீயை விட வெப்பமானவன், தண்ணீரை விட குளிர்ந்தவன். ஆனாலும் ஈசனின் அருளை அறிந்து கொள்பவர் இங்கு யாரும் இல்லை. அந்த சிவன் குழந்தையை விட நல்லவன், தாயை விட அன்பானவன். அவன் அடியவரின் பக்கத்தில் எப்போதும் துணையாக இருப்பான்.


வானில் நிற்கும் திங்கள்

நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து
ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே. – (திருமந்திரம்)

விளக்கம்:
நாள்தோறும் நிலையாய் நின்று வழிபடுவேன் என் இறைவனை. அந்த இறைவன் எரியும் நெருப்பைப் போன்ற வெளிச்சமுடையவன். வானில் நிற்கும் நிலவினைப் போல என் உடலினுள் வந்து பொருந்தி நிற்கின்றான், நான் உயிர்த்திருக்குமாறு.