மூச்சுக்காற்றில் பராசக்தி கலந்திருக்கிறாள்

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத்தொன் பானது நாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே . – (திருமந்திரம் – 702)

விளக்கம்:
யோக நிலையில், மூலாதாரத்தில் இருந்து எழுகின்ற சோதியுள் நம் நாயகியாகிய பராசக்தி கலந்திருக்கிறாள். நான்கு இதழ்களை உடைய மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை வழியாக எழுகின்ற குண்டலினி எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகளைக் கலந்து செல்கிறது.


மூச்சுக்காற்றே பெருஞ்செல்வம் ஆகும்!

இருநிதி ஆகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுந்தே . – (திருமந்திரம் – 701)

விளக்கம்:
நம்முடைய தலைவனான சிவபெருமான் வசிக்கும் சகசிரதளமும், பிராணாயாமத்தின் போது இயங்கும் மூச்சுமே நாம் பெற்ற பெருஞ்செல்வம் ஆகும். இவற்றை விட பெரிய செல்வம் வேறேதும் இல்லை. பிராணாயாமத்தினால் நமது மூச்சு இயங்கும் கணக்கு இருநூற்று முப்பத்து எட்டாகக் குறைந்து விடும்.


ஆய்ந்து அறிய முடியாத நாயகி

ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பத்தொன் றொன்பது
மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே. – (திருமந்திரம் – 700)

விளக்கம்:
ஆய்ந்து அறிந்து கொள்ள முடியாத தனித்தன்மை கொண்ட நாயகியாம் நம் பராசக்தி. பிராணாயமத்தின் போது நாம் இழுக்கும் மூச்சுக்காற்றுடன் அந்நாயகி எந்த அளவுக்கு கலந்திருக்கிறாள் என்பதை ஆய்ந்து அறிந்தால், பராசக்தியுடன் எழும் மூச்சுக்காற்று ஐந்நூற்று முப்பத்து ஒன்பது நாடிகளை நிரப்புகிறது. இதனால் உள்ளே நமது மூச்சு செல்லும் பாதை வளம் பெறுகிறது.


கலை நாயகி!

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே. – (திருமந்திரம் – 699)

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது மூலாதாரத்தில் இருந்து எழும் கலை நாயகியாகிய பராசக்தியை, நாம் உள்ளே இழுக்கும் மூச்சுக்காற்று பற்றிக்கொள்ளும் வகையை இப்படிச் சொல்லலாம். அக்கலை நாயகி தன்னுடைய ஐந்து முகங்களால் ஆறு ஆதாரங்களில் உள்ள ஐம்பத்தோரு எழுத்துக்களை நமக்கு உணர்த்தி தெளிவு ஏற்படுத்துகிறாள்.


ஆயிரமாயிரம் வெற்றிகளைப் பெறலாம்

ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே. – (திருமந்திரம் – 698)

விளக்கம்:
யாருடனும் ஒப்பிட முடியாத தனிப்பெரும் தத்துவ நாயகியாம் நம் பராசக்தி. பிராணாயாமத்தின் போது நடுநாடியாகிய சுழுமுனையில் அவள் ஊரும் வகையை உணர்ந்தால் ஆயிரமாயிரம் வெற்றிகளைப் பெறலாம். மனம் ஒன்றி பராசக்தியை மனத்தில் நினைத்து மூச்சுக்காற்றை சுழுமுனையில் செலுத்தும் பயிற்சியில் வெற்றி பெற்றால், அப்பயிற்சி வாழ்க்கையில் ஆயிரமாயிரம் வெற்றிகளைக் கொண்டு வரும்.


ஐந்து முக நாயகி!

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே. – (திருமந்திரம் – 697)

விளக்கம்:
ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவத்துடன் வசிக்கும் ஐந்து முகங்கள் கொண்ட சக்தியின் பத்துக் கைகளில் பத்து ஆயுதங்கள் ஏந்தி இருப்பதைப் பார்க்கிறோம். பிராணாயாமம் செய்து யோகத்தில் நிற்பவர்கள், இடைகலை மூச்சின் போது சகசிரதளத்தில் மலரும் ஆயிரம் இதழ்களில் ஒவ்வொரு இதழிலும் சக்தியின் முகத்தைக் காண்பார்கள். அதே போல் பிங்கலை மூச்சின் போதும் ஆயிரம் இதழ்களில் சக்தியின் ஆயிரம் முகங்களைக் காண்பார்கள். யோக காலத்தில் ஒரே சக்தி இரண்டாயிரம் சக்திகளாகத் தோன்றுவதைக் காணலாம்.


காலமும் திரண்டு நின்று உதவி செய்யும்

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்தது அஞ்சே. – (திருமந்திரம் – 696)

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது இடைகலை, பிங்கலை ஆகிய சீரான முச்சின் ஓட்டத்தில் சதாசிவ நாயகியாகிய சக்தி மேலெழுந்து சகசிரதளத்திற்குச் செல்கிறாள். ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவ நாயகி இரண்டு வகையான மூச்சுக்காற்றில் ஏறும் போது அவள் ஆறு ஆதாரங்களில் உள்ள ஐம்பத்தோரு எழுத்துக்களை உணர்த்தி சகசிரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரையை விரியச் செய்கிறாள். நாயகியின் இந்தச் செயலில் காலமும் திரண்டு நின்று உதவி செய்யும்.