ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம்
வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே – 833
விளக்கம்:
பரியங்கயோகத்தில் சிவசக்தியர் ஒன்று சேரும் தத்துவத்தை, மனிதக் கலவியுடன் ஒப்பிட்டால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் என்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம். இந்தப் பாடல் பரியங்கயோகத்தில் கிடைக்கும் இன்பத்தின் அளவை சொல்வதற்கு அதே உத்தியை பயன்படுத்துகிறது.
கலவியில் உச்சக்கட்ட இன்பத்தை பெறும் வயது பெண்ணுக்கு இருபது வயதும், ஆணுக்கு முப்பது வயதும் ஆகும். இந்தப் பருவத்தில் ஏற்படும் கலவி ஆணுக்கும் ஆனந்தத்தையும், பெண்ணுக்கு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். அவர்களுக்கு மனம் சோர்ந்தாலும், உடல் சோர்வடையாது. அதே அளவுக்கு ஒரு இன்பம் பரியங்கயோகத்தில் நிற்கும் சிவயோகிகளுக்குக் கிடைக்கும். அவர்களுக்கு மனம் சோர்ந்தாலும், உயிர்சக்தி சோர்வடையாது.
ஏய்ந்த – பொருந்திய, குழலி – அழகிய கூந்தலை உடைய குண்டலினி சக்தி