சிலப்பதிகாரத்தில் ஒரு சின்ன கைகலப்பு

நம்ம வீட்டில பூஜை நேரத்தில போடப்படும் சாம்பிராணிப் புகையை கவனிச்சு பார்த்திருக்கிறீங்களா? சின்ன வயசுல ரொம்ப நுணுக்கமாவே பார்த்திருப்போம். வளர வளர நம்ம observation கொறஞ்சு போயிருதே! அந்தப் புகைகள் ஒண்ணோட ஒண்ணு கலந்து அப்படியே மேல போறது எவ்வளவு அருமையான காட்சி! அப்படித்தான் கோவலனும் கண்ணகியும் ஒண்ணாக் கலந்து தன்ன மறந்து போனாங்களாம். மன்மதனும் ரதியும் கலந்து இருந்தாப் போல அவன் ஆற்றல் முழுசையும் கண்ணகிட்ட காட்ட, அவளும் தன் ஆற்றல் அத்தனையும் கோவலன் கிட்ட காட்ட, இப்படி ரெண்டு பேர் ஆற்றலும் அங்க கலந்து இருந்துச்சாம். அதுல அவங்களுக்கு ஏற்பட்ட நெறைவு கொஞ்சம் கூட கொறையலையாம்.  நெலயில்லாத இந்த வாழ்க்கைல முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையும் அனுபவிச்சிரணும்கிற மாதிரி இருந்ததாம் அவங்க நெலம.

தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து-நாமந்
தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.

(தூமம் – நறும்புகை, பணி – பரவுதல்,  கை – ஆற்றல்,  நாமம் – நிறைவு)

இங்கே கை கலந்து என்பது வலிமை அல்லது ஆற்றல் கலந்து என பொருள்படுகிறது.


ஊர்வம்பில் தீம்பில்லை

“அந்த மொத வீட்டு கணேசன் பஸ்லேருந்து கீழ விழுந்துட்டானாம். ஆஸ்பத்திரில சீரியஸா இருக்கான்”

“அடப்பாவமே! தான் உண்டு பாட்டில் உண்டுன்னு இருப்பானே. எங்க  வச்சு விழுந்தான்?”

“மெட்ராஸ்லருந்து மதுர வர்ற வழில”

“அவ்ளோ தூரம் படியிலயா நின்னுக்கிட்டு வந்தான்?”

“பஸ்ஸோட டாப்புல படுத்தவன் அசந்து தூங்கிட்டான் போல”

“டாப்புலயா? அவன் ஏங்க அங்க போய் படுத்தான்?”

“கைல காசில்ல போல. யாருக்கும் தெரியாம மேல ஏறி படுத்துகிட்டான்”

“அடப்பாவி! இப்பிடி விழுந்தான்னா பொழைக்க முடியாத? எப்டி இருக்கான் இப்போ?”

“பொழச்சுக்கிட்டானாம். அவன் வீட்ல யாருக்கும் தெரியாது. நீ எதுவும் சொல்லிராத”

“யாரு? அந்த அழகி கிட்டயா? நான் ஏங்க அவகிட்ட பேசப்போறேன்!”

“அவ அழகியா? இந்த விஷயம் இவ்வளவு நாள் தெரியாம போச்சே”

“அப்பிடித்தான அலட்டிக்கிடுறா அவ”

“சரி இருக்கு அலட்றா. இங்க ஏன் தீயுற வாசம் வருது? ஆனா இதில ஒரு காமெடி என்னன்னா…  ஸாரிப்பா அது காமெடி இல்ல. விழுந்தவன் வலியே தெரிலன்றானாம்.”

“ஏன்? அவ்ளோ மப்பா?”

“அவன் சொல்றானாம், என் பொண்டாட்டி பண்றதெல்லாம் நெனச்சுப் பாத்தா இதெல்லாம் ஒரு வலியே இல்ல அப்படின்னு சொன்னானாம்”

“பாவங்க அவன். கல்யாணத்துக்கு முன்னால நல்லாருந்தான். ஒரு கெட்ட பழக்கம் கெடையாது. இந்த அழகி வந்தா, எல்லாம் போச்சு”

கொஞ்ச நேரம் அங்கே அப்பாடாங்கிற மாதிரி இருந்தது. ”இவ கூடத்தான் சண்டை போடுவா, ஆனா இப்படியா?  யோசிச்சுப் பார்த்தா இவள் சண்டையிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது.”

“இவரெல்லாம் என்னைக்காச்சும் குடிச்சிருக்கிறாரா? இல்ல வேற எதுவும் கெட்ட பழக்கம்தான் உண்டா? என்ன கொஞ்சம் தொண தொணம்பாரு”

ஒரு ஊர்வம்பின் முடிவு இது.

காதில் வந்து விழுந்த இன்னொரு ஊர்வம்பு  இது.

“ஏடி! உங்க அக்கா திருச்செந்தூர் கடல பாத்திட்டு இவ்ளோ தண்ணியா அப்படின்னுருக்கா. அடுத்த நாள் கடல் பத்தடி உள்ள போயிருச்சு. உன் பவிசையெல்லாம் அவகிட்ட காம்பிச்சிராத”


தலையெழுத்து – மாறுதலுக்கு உட்பட்டது

சில பேர் தெளிவாத்தான் இருப்பாங்க. ஆனால் ரொம்ப சோதனை வரும் போது ‘நம்ம நேரம் சரியில்லையோ’ அப்படிங்கிற நினைப்பு வரும். அது அந்த நெருக்கடி நேரம் மட்டும் தான், பிறகு அந்த நினைப்பை உதறிட்டு  களத்துல இறங்கிடுவாங்க.  இது நார்மலான விஷயம். இன்னொரு வகையானவர்கள் உண்டு, ’எல்லாமே விதிப்படி தான் நடக்குது. நாம என்ன தான் முட்டி மோதினாலும் நடக்குறது தான் நடக்கும்’ அப்படின்னுட்டு பெரிசா முயற்சி எதுவும் எடுக்க மாட்டாங்க. இப்படி தலைவிதியை மட்டுமே நம்பி நொந்து கொள்பவர்கள் இந்த பழமொழி நானூறு பாடலைப் படித்துப் பார்க்கலாம்.

முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்
இழுகினா னாகாப்ப தில்லையே முன்னம்
எழுதினான் ஓலை பழுது.

எல்லாம் ஏற்கனவே அவன் எழுதி வைத்த தலையெழுத்துப்படி தான் நடக்கும், அப்படின்னு முயற்சி எதுவும் இல்லாமல் அந்த சாமியை கும்பிட்டுகிட்டே இருந்தால் துன்பம் தீராது. “எதனாலேயோ தலையெழுத்தை தப்பா எழுதிட்டான், நாம செய்யுற முயற்சியைப் பார்த்து அந்த தவறைத்  திருத்தி கண்டிப்பாக மாற்றி எழுதுவான்” அப்படிங்கிறது தான் சரியான அணுகுமுறை.

இழுகினானாகக் காப்பதில்லையே, முன்னம் எழுதினான் ஓலை பழுது” என்பது பழமொழி.

சோம்பலை விரட்ட உதவும் இன்னும் சில பழமொழிகளைப் பார்க்கலாம்.

தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் செய்கல்லார்
பின்னை ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல்
சென்னீர் அருவி மலைநாட! பாய்பவோ
வெந்நீரு மாடாதார் தீ.

 தானே செய்து முடிக்கக் கூடிய சிறிய காரியத்தை கூட, வேறு ஒருவரிடம் தள்ளி விட்டு முடிக்கச் செய்பவரிடம், முக்கியமான பெரிய பொறுப்பை கொடுத்தால், அது வேலைக்கு ஆகாது. “பாய்பவோ வெந்நீரு மாடாதார் தீ” என்பது பழமொழி. வெந்நீரில் குளிக்க முடியாதவரை தீயில் பாயச் சொன்னால் பாய்வாரோ!

ஒன்றால் சிறிதால் உதவுவதொன் றில்லையால்
என்றாங் கிருப்பின் இழுக்கம் பெரிதாகும்
அன்றைப் பகலேயும் வாழ்கலார் நின்றது
சென்றது பேரா தவர்.

ஒரு வியாபாரி விற்பனைக்கு வைத்திருக்கும் பொருள் ஒன்றெனினும் , அதுவும் சிறிதெனினும், அதை விற்க போதிய உதவி கிடைக்கவில்லை எனினும், முயற்சி இல்லாமல் சோம்பி இருந்தால் அதனால் கெடுதலே விளையும். ஒரு நாள் தன்னாலேயே அழிந்து விடுவர். விடா முயற்சியாய் சிறிய அளவிலாவது கொடுக்கல் வாங்கல் செய்து வர வேண்டும். “வாழ்கலார் நின்றது சென்றது பேராதவர்” என்பது பழமொழி. அதாவது கொடுக்கல் வாங்கல் செய்யாதவரின் வாழ்வு கடினம்.

வெற்றி வேல் வேந்தன் வியங்கொண்டால் யாம் ஒன்றும்
பெற்றிலேம் என்பது பேதைமையே, மற்று அதனை
எவ்வம் இலராகிச் செய்க, அது அன்றோ
செய்க என்றான், உண்க என்னுமாறு

வெற்றிவேல் வேந்தன் ஏவல் செய்தால், நம்மால் முடியுமோ முடியாதோ என்று நினைப்பது அறியாமையே! வெறுப்பு எதுவும் இல்லாதவராக அந்த வேலையை சிறப்பாக செய்க. அது எப்படியென்றால் “செய்க என்றான் உண்க என்னுமாறு”.

வெற்றிவேல் வேந்தன்னு சொல்கிறார் முன்றுறையரையனார். அதாவது சக்ஸஸ்ஃபுல் பாஸ்.  அந்த பாஸுக்கு நம் வேலைத் திறன் என்ன, நம் வேலைக்கு என்ன சம்பளம் கொடுக்கணும் எல்லாமே தெரியும். அதெல்லாம் தெரிஞ்சதால தான் வெற்றி வேல் வேந்தன். அவர் நம் திறமையை நம்பி ஒரு அசைன்மண்ட் சொன்னா ஸ்பெசல் மீல்ஸ் ஆர்டர் பண்ணின மாதிரி. அள்ளி சாப்பிட வேண்டியது தான்.

புதிய வருடத்தில் கூர் அம்பு அடி இழுத்து, தடைகளைத் தகர்த்து எறிந்திட வாழ்த்துகள்!


நிர்வாகத்தில் உதவும் பழமொழிகள்

முத்தையா ஒரு செங்கல் வியாபாரம் ஆரம்பித்தான். முதலில் நூறு கல் வித்தாலே பெரிய வியாபாரமா இருந்தது. வேலைக்கு ஆள் வச்சுக்கலை. தனக்கே சம்பள அளவில் ஏதாவது கிடைச்சா போதும்னு நடத்தினான். கொஞ்ச கொஞ்சமா வியாபாரம் கூடிச்சு. செங்கலை லோடாக கேட்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் வருமானம் ஏறுச்சு. வேலைக்கு ஒரு ஆள் வச்சா இன்னும் கொஞ்சம் வியாபாரம் கூட்டலாம்னு நெலமை வந்தது. வர்ற வருமானத்தில சின்ன பங்கு சம்பளமா குடுத்தா என்னன்னு தைரியமா வேலைக்கு ஆள் வச்சான். ஒரு ஆள் பத்து ஆள் ஆச்சு. ஒரு லாரி வாங்கி அதுவும் ஏழெட்டு ஆயிருச்சு. பர பரன்னு எல்லாருமா வேலை பார்த்து பெரிய வியாபாரமா வளர்த்துட்டாங்க.

முத்தையாவுக்கு இப்போ தன்கிட்ட வேலை பார்க்கிற பத்து பதினஞ்சி பேரை சரியா வேலை வாங்கினாலே போதும். வியாபாரம் தன்னால நடக்கும். அவன் ரொம்ப படிச்சிருக்கலைன்னாலும் தன்னோட அனுபவத்தினால யார்கிட்ட என்ன வேலை குடுக்கலாம், எப்படி அவங்களை சோர்வடையாம வேலை வாங்கலாம்னு தெரிஞ்சிகிட்டான். ஒருத்தன வச்சு இன்னொருத்தன கண்காணிக்கிறது எப்படிங்கிறது கூட கத்துகிட்டான்.

Mary Parker Follett என்னும் அமெரிக்க மேலாண்மை ஆலோசகர் (அவர் வாழ்ந்து முடிந்து 80 வருஷம் ஆகுது) ”management is the art of getting things done through people” என்கிறார். இவர் எழுதிய மேலாண்மையப் பற்றிய தத்துவங்கள் முக்கியமானவையாக பேசப்படுகிறது. முத்தையாவுக்கு இதெல்லாம் தெரியாது, ஆனால் இதத்தான் அவன் செஞ்சிகிட்டு இருக்கான்.

மேலாண்மையை ஆறு செயல்பாடுகளாக பிரிக்கிறார்கள்.

  1. Planning
  2. Organizing
  3. Staffing
  4. Leading
  5. Monitoring
  6. Motivation

Planning – திட்டமிடுதல். எவ்வளவு செங்கல் வித்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும், எவ்வளவு செங்கல் இங்கே விற்க முடியும், நாம் எவ்வளவு கொள்முதல் செய்து இருப்பு வைக்கலாம் என்பதெல்லாம் யோசித்து முடிவு செய்வது. பழமொழி நானூற்றில் உள்ள ஒரு பாடல் இது.

தற்றூக்கித் தன்துணையுந்தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும்.

இதில் உள்ள பழமொழி – ’யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும்’.

இது நம்மால் செய்ய முடியுமா, இதை செய்து முடிக்கும் அளவு நமக்கு துணை உள்ளதா (ஆள் துணை மட்டுமில்லாமல் storage, transportation போன்றவையும் சேர்த்து), இதை முடிப்பதால் நமக்கு போதுமான பயன் உண்டா (வருமானம்) என்பதெல்லாம் யோசித்து அப்புறம் காரியத்தில் இறங்குபவர் வல்லவர்.

Organizing ஒருங்கிணைத்தல். அதாவது செயல்முறை வகுப்பது. செங்கலின் இருப்பை பராமரிக்க ஒருவர், வரவு செலவு எழுதி வைக்க ஒருவர், வசூல் செய்ய ஒருவர், இப்படி வேலைகளை பிரித்து கொடுத்து அவர்களுக்குள் ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்துவது.

முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்தற
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்கு இல்லை பெயர்.

இதில்  ‘வடிந்தற வல்லதற்கில்லை வருத்தம்’ என்று பழமொழி ஆசிரியர் சொல்வது organizing என்பதற்கு பொருத்தமாக உள்ளது. அதாவது எந்த ஒரு வேலையையும், அது எவ்வளவு கடினமானதா இருந்தாலும், தெளிவா ப்ளான் பண்ணி பிரிச்சிகிட்டோம்னா அது நல்லபடியா முடியும்..

Staffing சரியான ஆட்களை வேலைக்கு அமர்த்துவது. அவர்கள் தகுதி தெரிந்து சரியான வேலை கொடுப்பது. பழமொழி  நானூறில் இதற்கு நிறைய பாடங்கள் உள்ளது.

தெற்ற அறிவுடையார்க் கல்லால் திறனிலா
முற்றலை நாடிக் கருமஞ் செயவையார்
கற்றொன் றறிந்து கசடற்ற காலையும்
மற்றதன் பாற்றேம்பல் நன்று.

தெளிந்த அறிவுடையவர் திறன் இல்லாதவனை வேலையில் அமர்த்த மாட்டார். கற்று அறிந்தவரையும் குற்றம் இல்லாதவரையும் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். யார் யாரை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு நிறைய பழமொழிகள் உள்ளன.

Leading வழி நடத்துதல். இது ஒரு மேனேஜரின் வேலை. எந்த சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்கும் திறன். உதாரணத்திற்கு வேலை செய்பவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் அவர்களை வழிக்கு கொண்டு வர தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்க்கு சப்ளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து.

சிலரிடம் தன்மையாக நடந்து கொண்டால் தான் வேலை வாங்க முடியும். வேறு சிலரிடம் கடுமை காட்டினால் தான் வேலை நடக்கும். குளிக்கும் போது தேவைக்கேற்ப தண்ணீரில் வெந்நீர் கலப்பது போல அவரவர் தன்மைக்கேற்ப வேலை வாங்க வேண்டும். ஒரு மேனேஜருக்கு உபயோகமான பாடம் இது.

Monitoring – கண்காணித்தல். அவரவர் வேலையை பிரித்து ஒப்படைத்து விட்டாலும், அவர்கள் நல்லவர் ஆனாலும் வல்லவர் ஆனாலும் அவர்களிடம் வேலையின் நடப்பு நிலை பற்றி தொடர்ந்து விசாரித்து வர வேண்டும். இதற்கு ரொம்பவே பொருத்தமான பாடல் ஒன்று உண்டு.

விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்
தட்டாமல் செல்லா துளி.

தொட்டாலே துவளும் துளிரின் மேல் உளியை வைத்தாலும், அந்த உளியை தட்டினால் ஒழிய அது தளிரை வெட்டாது. அது போல பிறரிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் தொடர்ந்து அவரிடம் அது என்னாயிற்று என்று விசாரித்து வர வேண்டும்.

Motivation ஊக்கப்படுத்துதல். வேலை பார்ப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கொஞ்சம் ஊக்கம் சேர்த்து கொடுத்தால் அங்கே வேலை நன்றாக நடக்கும். எல்லாருமே ஒரு அங்கீகாரத்திற்காக ஏங்குபவர்கள் தான். இங்கே ஒரு ஊக்கம் தரும் பாடல்.

வீங்குதோட் செம்பியன்சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம்
படியிழுப்பின் இல்லை யரண்.

கூர்மையான அம்பை வில்லில் பொருத்தி அதன் அடியை இழுத்தால் எதிரே இருக்கும் எந்த தடையும் பொடி பொடியாகி விடும். நம்முடைய முயற்சி அந்த வகையில் இருந்தால் எவ்வளவு கடினமான காரியத்தையும் சாதிக்கலாம்.

மேலே சொன்ன செய்யுள்கள் பழங்காலத்தில் எழுதப்பட்டதால் புரிவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் அதன் பொருள் உணர்ந்து பார்க்கும் போது இப்போதுள்ள மேலாண்மைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது. பழமொழி நானூறு மொத்தம் நானூறு பாடல்கள் கொண்டது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் வருகிறது. இதன் ஆசிரியர் முன்றுறையரையனார். இதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என கருதப்படுகிறது. தற்சிறப்பு பாயிரத்தில் ‘பண்டைப் பழமொழி நானூறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்தப் பழமொழிகள் பழமையானது என்றால் அவை வழக்கத்தில் தோன்றிய காலத்தை யோசித்துப் பார்த்தால் அதன் தொன்மை புரியும்.

பழமொழி நானூறு பல விஷயங்கள் பற்றி பேசுகிறது. கல்வி, ஒழுக்கம், பொருள், முயற்சி, நட்பு, அரசியல், நன்றி, காரியம் முடிக்கும் சாதுர்யம், இல்வாழ்க்கை, இப்படி அது தொட்டுச் செல்லும் தலைப்புகள் அதிகம். பகைவனை எப்படி சமாளிப்பது என்று கூட பாடல்கள் உண்டு. இதோ ஒரு உதாரணம்.

இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
சிறுகுரங்கின் கையாற் றுழா.

தனது பகைவனை வெல்ல நினைப்பவன், முதலில் தனது பகைவனுக்கு எதிராக இன்னொரு பகையை வெளியே இருந்து தூண்டி விட்டு ஒரு குழப்ப நிலையை உருவாக்கி, தமது பகை தீர்ப்பதற்கு சாதகமான நிலையை உருவாக்கலாம். பெரிய குரங்கு வேகின்ற கூழை சிறிய குரங்கின் கையாயால் கிளறி விடுவது போல. ’சிறுகுரங்கின் கையாற் றுழா’ என்பது பழமொழி. பகையைப் பற்றிய வகையில்  இந்த பழமொழி வந்தாலும், இதை வணிகத்தில், செய்யும் தொழிலில், போட்டியாளர்களை சமாளிக்கும் விஷயத்தில் பொருத்திப் பார்க்கலாம்.

இந்த பழமொழியெல்லாம் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே பேச்சு வழக்கில் இருந்துள்ளது. சிக்கலான நிர்வாக தத்துவமெல்லாம் சர்வ சாதாரணமா பழமொழியா பேசியிருக்காங்க. வரலாற்றில் படிச்சிருக்கோம், பழங்காலத்தில் தமிழர்கள் வாணிபத்தில் வல்லவராய் இருந்தார்கள், கடல் கடந்து வாணிபம் செய்து நிறைய பொருள் சம்பாதித்தார்கள் என்று. இந்த நிர்வாகத் தெளிவு கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதுதான் இன்றைக்கும் முத்தையா மாதிரி வியாபாரிகளுக்கு இரத்தத்திலேயே ஊறியிருக்கு போல.


வெள்ளி கறுத்தால் சனி

வியாழக்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் ஒரே சண்டை. இடையில் மாட்டிக் கொண்ட ஒரு ராகு காலம் மயிரிழையில் செத்துப்போனது. இருவருக்கும் இடையே சமரசம் பண்ண இறங்கி வந்த டிசம்பர் மாசம் வாங்கிக் கட்டிக்கொண்டது.

“ஒனக்கே ஒரு நெலையான எடம் கெடையாது. பாதி நாள் கார்த்திகைலயும் மீதி நாள் மார்கழிலயும் இருக்கே. நீ எங்களுக்கு நாட்டாமையா?” எப்பிடி மடக்கினேன் பாத்தியா என்று தொலைக்காட்சி விவாத்தில் கலந்து கொண்டவர் போல பெருமிதப்பட்டுக் கொண்டது வியாழன்.

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?” பஞ்சாயத்துக்காரரின் ஆர்வம் வெளிப்படையாகவே தெரிந்தது.

“ஏன்? பிரச்சனை இருந்தாத்தான் சண்டை போடணுமா?” இப்போ வெள்ளி ‘இது எப்படி’ என்பது போல் வியாழனைப் பார்த்தது. வெளியில் இருந்து ஒருவர் எட்டி எட்டிப்பார்த்தார், பார்க்க வெளிநாட்டுக்காரர் போல இருந்தது.

“என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.  முகநூல் என்ற பெயரில் அறியப்படுபவன் நான். என்னைத் தவிர்த்து இந்த உலகில் எந்த சச்சரவும் நடக்க முடியாது. இங்கே ஒரு வன்கொடுமை நடப்பதாக அவதானித்து உணர்ந்தேன். உங்கள் கருத்து மோதலை என் இடத்தில் வந்து நீங்கள் நிகழ்த்தலாம்”

“ஸார், நீங்க ஆங்கிலத்திலேயே பேசுவது தமிழுக்கு நல்லது” வியாழனும் வெள்ளியும் சேர்ந்து கொண்டன.

“ஓகே. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?”

“இட் இஸ் அவர் ப்ராப்ளம்!”

சம்பந்தம் இல்லாமல் வந்தவர்களை விரட்டி விட்ட சந்தோஷத்தில் இரண்டு வயது முதிர்ந்தவர்களும் (இளமைக்கு எதிர்ப் பதம் கிழமை தானே) சிரித்துக் கொண்டார்கள். திடீரென வெள்ளி கறுப்பாக மாற ஆரம்பித்தார்.

“நீ ஒரிஜினல் தான்” வியாழன் சொன்னார். “கறுக்கிற வெள்ளி தான் ஒரிஜினலாமே!”


மரணம் என்னும் ஒரு வசீகர மர்மம்

மரணத்தைப் போல ஒரு வசீகரமான விஷயம் இருக்குமான்னு தெரியலை. அந்த வசீகரத்தின் முக்கிய காரணம் அதன் பின்னால் இருக்கும் மர்மம். மர்மமான விஷயங்கள் வசீகரித்தை உண்டாக்குவது தானே இயற்கை? மரணம் வாழ்வுக்கு எதிரான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது, ஆனால் சாவு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே. கவிஞர் வைரமுத்து தவம் என்றொரு கவிதையில் எழுதியிருப்பார் “எனக்குத் தெரியாமல் என் பிறப்பு நேர்ந்தது போல், எனக்குத் தெரியாமல் என் இறப்பும் நேர வேண்டும்”. எவ்வளவு அர்த்தமுள்ள தவம்!

சமீபத்தில் நேர்ந்த அம்மாவின் மரணம் இப்படி ஒரு ஏக்கத்தை தான் ஏற்படுத்தியது. அப்பேர்ப்பட்ட சாவு அது, விஜயதசமி அன்று மதிய நேரம், கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தார். சிகிச்சைக்காக போன ஆஸ்பத்திரியின் உள்ளே நடந்தே தான் போனார், நாடி பிடித்துப் பார்த்த டாக்டர் பல்ஸ் ரொம்ப குறைந்து விட்டதாக சொல்லி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதற்குள் உயிரை விட்டு விட்டார்.

தன்னைத் தேடி வந்த மரணத்திடம் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் தன்னை ஒப்படைத்ததாகவே தோன்றியது எனக்கு.  சாகும் கலை என்னும் தலைப்பில் ஓஷோ மணிக்கணக்கில் பேசியிருக்கிறார், நானும் கேட்டிருக்கிறேன். ’நீங்க எல்லாம் பேசுவீங்க, எழுதுவீங்க, படிப்பீங்க, ஆனா அது எனக்கு கை வந்த கலை’ன்னு பத்து நிமிஷத்தில் செய்து காட்டி விட்டார் அம்மா.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.  – (திருமந்திரம் – 145)

திருமூலர் சொன்ன மாதிரி காலப்போக்கில் இறந்து போன அம்மாவை மறந்தாலும் ‘dead like me’ எனச் சொல்லாமல் சொன்ன செய்தியை மறக்க முடியாது.


கவிக் கள்ளைக் குடித்து வெறி ஏறுதடா!

நூலகம் வலைப்பக்கத்தில் 1943ஆம் வருடத்து மும்மாத இதழ் ஒன்று படிக்க நேர்ந்தது. ’கலாநிதி’ என்பது அந்த இதழின் பெயர். அதன் உள்ளடக்கம் சுவாரசியமாக இருந்ததால் எடுத்துப் படித்தேன். சில இலக்கியக் கட்டுரைகளுடன் ஒரு மொழி ஆராய்ச்சிக் கட்டுரையும் உள்ளது, உபயோகமான தகவல்கள் நிறைந்தவை. அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியான அடுத்த பகுதிகள் கிடைக்குமா என்பது தெரியவில்லை, கிடைத்தால் மிகவும் பயன் உள்ளவையாக இருக்கும்.

அப்புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே வந்த போது “தமிழ்க்கவிப் பித்து” என்ற தலைப்பில் ஒரு பாடல், அதைப் படிக்கும் போது ரொம்பவே உணர்ச்சி வசப்பட வைத்தது. அந்தப் பாடலை இங்கே பகிர்கிறேன், இதை எழுதிய  ‘க.ச. ஆனந்தன்’ அவர்களுக்கு நமது கோடி வணக்கங்கள்.

தமிழ்க்கவிப் பித்து

பொன்னின் குவையெனக்கு வேண்டிய தில்லை – என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டிய தில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டிய தில்லை – அந்த
மார னழகெனக்கு வேண்டிய தில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமே யடா! – உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமே யடா!
தின்னத் தமிழெனக்கு வேணுமே யடா – தின்று
செத்துக் கிடக்கத்தமிழ் வேணுமே யடா!

உண்ண உணவெனக்கு வேண்டிய தில்லை – ஒரு
உற்றா ருறவனிரும் வேண்டிய தில்லை
மண்ணில் ஒருபிடியும் வேண்டிய தில்லை – இள
மாத ரிதழமுதும் வேண்டிய தில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்று களிப்பேன் – உயிர்
பாயு மிடங்களிலே தன்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன்  – அங்குக்
காயுங் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.

மாட மிதிலைநகர் வீதி வருவேன் – இள
மாதர் குறுநகையிற் காத லுறுவேன்
பாடி யவரணைக்கக் கூடி மகிழ்வேன் – இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசி மகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கி யெழுவேன் – பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் – அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தி யறிந்து – அங்குச்
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்
அம்பொன் னுலகமிது கண்டனெ னடா! – என்ன
ஆனந்த மானந்தங் கண்டனெ னடா!

கால்கள் குதித்துநட மாடுதே யடா! – கவிக்
கள்ளைக் குடித்துவெறி யேறுதே யடா!
நூல்கள் கனித்தமிழில் அள்ள வேண்டும் – அதை
நோக்கித் தமிழ்பசியும் ஆற வேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டிய தில்லை – அவர்
தின்னுஞ் சுவையமுது வேண்டிய தில்லை
சாவிற் றமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்.


வெற்றிலை விற்கும் கிழவி

எங்க ஊர்ல வெற்றிலை மொத்தமாக வாங்கனும்னா ரெண்டே கடைகள் தான் உண்டு. ஒரு கடை  சுமார் முப்பது வயதுள்ள இளந்தாரியால் நடத்தப்படுவது. இன்னொன்று ஒரு பாட்டியால் நடத்தப்படும் கடை. பாட்டிக்கு எழுபது வயசு இருக்கும், கொஞ்சம் கோபக்கார பாட்டி. துணை யாரும் தேவைப்படாமல் தானே எல்லா வேலையும் பார்த்துக் கொள்வார். வெற்றிலை முக்கிய வியாபாரம், அது போக பூஜைக்கு தேவையான பொருட்களும் வியாபாரம் உண்டு.

நான் முப்பது ரூபாய்க்கு வெற்றிலை வாங்குவேன். இளந்தாரி கடையில் வாங்கினால் வெற்றிலை எண்ணிக்கை கொஞ்சம் அதிகமிருக்கும். பாட்டியிடம் வாங்கினால் எண்ணிக்கை கம்மி தான், ஆனால் எடைக்கணக்கு ஒரே மாதிரிதான், 100 கிராம் பத்து ரூபாய்னா, ரெண்டு பேர் கிட்டயும் அதே விலை தான். நான் வாடிக்கையாய் வாங்குவது பாட்டியிடம் தான்.

எண்ணிக்கை வித்தியாசத்திற்கு காரணம் இதுதான் – இளந்தாரி வரும் வெற்றிலையை வாங்கி ஒரு கட்டு மட்டும் பிரித்து வைப்பார், தேவைப்படும் போதுதான் அடுத்த கட்டு பிரிப்பார். கேட்பவர்களுக்கு அப்படியே எடை போட்டு கொடுப்பார். பாட்டியின் வியாபார முறை வேறு. வரும் வெற்றிலையை பூராவும் பிரித்து தண்ணீரில் நனைத்து அடுக்கி விடுவார். வெயிலாக இருந்தால் அடிக்கடி தண்ணீரில் நனைத்து வாடாமல் பார்த்துக்கொள்வார். எடை போடும் போது ஒரு முறை தண்ணீரில் நனைத்துக் கொள்வார். தண்ணிரின் எடை சேர்ந்து கொள்வதால் வெற்றிலை எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

பாட்டிக்கு லாபமும் அதிகம், நல்ல வெற்றிலையாக தருகிறார் என்ற பெயரும் கிடைக்கிறது. இது மாதிரி பாட்டிகள் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள். வேறு வியாபாரங்களும் செய்கிறார்கள், அவர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை. அவர்களை நினைத்து கண்ணீர் விடும் கட்டுரைகள் சிலவற்றை படிக்க நேர்ந்தது. கண்ணீர் விடுபவர்களுக்கு நான் சொல்வது இதுதான் – ‘எங்க பாட்டி ஒரு மொதலாளிங்க’.


ஆக்னட்டிக் கதிர்கள் – விஞ்ஞானத்தின் அற்புதம்

Electro Ognatics –  இது சமீபத்திய விஞ்ஞானத்தின் புதிய பிரிவு. இதன் வருங்கால சாத்தியங்கள் நினைத்துப் பார்க்க பிரமிப்பானவை. மிண்ணனுவியலில் ஒரு நூறாண்டு காலத்தை ஒரே பாய்ச்சலாக கடந்து விட்டோம் என்றே சொல்லலாம். இந்த புதிய விஞ்ஞானம் பல துறைகளில் செயல்படப் போகிறது என்றாலும், மனிதனின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. விபத்தினால் சாவு என்பதே இனி இராது, 108 ஆம்புலன்ஸ்களை வேறு எத்ற்கு பயன்படுத்தலாம் என்று ஒரு குழு யோசித்து வருகிறது. மனிதன் தன் சக மனிதனைக் கொலை செய்வது அசாத்தியமாகிறது. கடலினால் சூழப்பட்ட இந்த உலகில் இனி இயற்கை மரணம் மட்டுமே நிகழும்.

மனித வாழ்வின் முக்கிய அங்கமாய் இருக்கப் போகும் ஆக்னட்டிக் கதிர்கள் செயல்படும் விதம் பற்றி எனக்கு முழுதாக தெரியும் என்றாலும், அதெல்லாம் சொன்னால் உங்களுக்கு புரியாது என்பதால் சுருக்கமாக சொல்கிறேன். நம் உடலை சுற்றி சுமார் ஆறு அங்குல அடர்த்தியில் ஆக்னட்டிக் கதிர்களை உருவாக்கி விடுவார்கள். இது நமது உடலுக்கு ஒரு கவசமாய் செயல்படும். ஆக்னட்டிக் கதிர் உடையவனை அரிவாளால் வெட்ட முடியாது, துப்பாக்கியால் சுட முடியாது, நெருப்பினால் சுட முடியாது, பனியினால் உறைய வைக்க முடியாது. கீதையில் பகவான் கிருஷ்ணர் இதை பற்றி அப்போதே சொல்லியிருக்கிறார். இந்தக் கதிர் செயல்பாட்டில் இருக்கும் போது துரதிர்ஷ்டவிதமாக ஏதாவது விபத்து நடந்து விட்டால் கூட, ஒரு சின்ன சிராய்ப்பு கூட இல்லாமல் எழுந்து வந்து விடலாம்.

இந்த ஆக்னட்டிக் கதிர்களை அணிந்து கொள்வது மிகவும் சுலபம். சிம் கார்டு போன்ற சிப் ஒன்றில் உள்ளடக்கி விடக்கூடிய கதிர்கள் இவை. இனி வரப் போகும் மொபைல்கள் இந்த சிப்பை பொருத்திக் கொள்ளக் கூடிய வசதிகளுடன் வடிவமைக்கப்படுகின்றன. ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட் பெய்ட் முறையில் இந்த கதிர்களை மொபைல் மூலமாகவே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்தக் கதிர்கள் கண்ணுக்கு புலப்படாதவை, எடை இல்லாதவை, தேவை இல்லாத நேரத்தில் ஆஃப் செய்து கொள்ளலாம்.

விருதுநகர் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய ஊரில் இது பற்றிய ஆராய்ச்சிகள் முழு வீச்சில் நடைபெற்று, இப்போது முழுமையடையும் நிலையில் உள்ளது. தலைமை விஞ்ஞானியிடம் பேசிய போது, இது தாமதமான முயற்சி என்றும், முன்பே செய்திருந்தால் நாம் காந்தியை இழந்திருக்க மாட்டோம் என்றும் சொல்லி வருத்தப்பட்டார். இந்த ஆக்னட்டிக் கதிர் வீச்சு முறை நெருப்பு, நீர், ஆயுதப் பிரயோகம், கார் விபத்து, லாரி விபத்து, விமான விபத்து ஆகிய எல்லாவற்றிலும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு விட்டது. சிறிய அளவில் கூட அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

அப்புறம் ஒரு முக்கிய விஷயம். இந்த ஆக்னட்டிக் கதிர்கள் அணுக் கதிர் வீச்சுக்களையும் தாங்க வல்லவை. இன்னும் ஒரு சில வாரங்களில் ‘ஆக்னோ’ என்ற பெயரில் இந்த பொருள் விற்பனைக்கு வருகிறது, மாதம் எண்ணூறு ரூபாய் என்ற அளவில் அதன் விலை இருக்கும் என தெரிகிறது. புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு இருவருக்கான ஒருங்கிணைந்த கதிர் வீச்சு வடிவமைத்து தரப்படும், கொஞ்சம் விலை அதிகமாய் இருக்கும். கடைசியாய் ஒரே ஒரு விஷயம் – இந்தக் கட்டுரையை நம்பி உங்கள் ஹெல்மெட்டை நீங்கள் தூர எறிந்து விட்டால், அதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.


அனுபவத்துல சொல்றேன்

என்னோட அனுபவத்துல சொல்றேன், கோபத்தை அடக்கி வைக்காதீங்க. இப்படி சொல்றதுனால கோபம் வந்தா எதிர்ல இருக்கிறவங்களை கடிச்சு குதறணும்னு அர்த்தம் இல்லை. ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருக்கோம், திடீர்னு வார்த்தைகள் உரசிக்கிடுது, அதுலே ஒரு வார்த்தை தன்மானத்தை பதம் பார்க்கும் போது சுருக்குனு கோபம் வரும். சம்பந்தப்பட்டவங்க நமக்கு அடங்கினவங்களா இருக்கும் போது பிரச்சினை இல்லை. மேலே விழுந்து பிறாண்டி வைக்கலாம், பிறகு சமாதானப்படுத்திக்கிடலாம். இதே கோபத்தை உண்டாக்குறது நமக்கு அன்னியரா இருந்தால் பேச்சை நிறுத்திட்டு வந்திருவோம். சம்பந்தப்பட்டவரை நாம் சார்ந்திருக்கும் நிலை இருக்கும் போதுதான் கஷ்டம். கோபிக்க முடியாதது மட்டுமில்லை, அபத்தமா சிரிச்சு சமாளிக்க வேண்டி வரும். அதனால ஒண்ணும் தப்பில்லை.

அனுபவத்துல சொல்றேன், இந்த மாதிரி சூழ்நிலைல கோபப்பட்டுக் காரியத்தை கெடுத்துகிடாதீங்க. முதலாளி, மேனேஜர்,  அதிகாரி, இவங்க கிட்ட ஒரு தடவை முறைச்சுகிட்டோம்னா அப்புறம் நம்மை ஜென்ம விரோதியாத்தான் பார்ப்பாங்க. அந்த நேரம் சூடு, சொரணை எல்லாத்தையும் கொஞ்ச நேரம் மறந்து, ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ ங்கிற பாவனையில் நின்று சமாளிச்சுகிடலாம். அவங்களுக்குத் தெரியும், இவனுக்கு கோபம் இருக்கு, மரியாதைக்காக பேசாம போறான்னு. இந்த குற்ற உணர்ச்சி நாளை நமக்கு சாதகமாகலாம்.

அனுபவத்துல சொல்றேன், இந்த மாதிரி அடக்கி வைச்ச கோபம் உள்ளே குமுறிக்கிட்டே இருக்கும். அதை வீட்டில உள்ளவங்க கிட்ட போய் கொட்டிடாதீங்க. அவங்க எல்லாம் நமக்கு அடங்கின மாதிரி பாவனை பண்றவங்க. போய் அவங்களை சீண்டுனா, அந்த பாவனையெல்லாம் கழட்டி வச்சிருவாங்க.

அனுபவத்துல சொல்றேன், இந்த கோபத்தை எல்லாம் உள்ளே ரொம்ப சேமிச்சு வைக்கக்கூடாது. அது நம்மை மெல்ல கொல்கிற விஷமாம். அதை செலவழிச்சு தீர்க்க நிறைய வழி இருக்கு. ஒரு நோட்டுல சம்பந்தப்பட்டவங்க பேரை எழுதி, அந்த பேரை பேனாவாலேயே ஆசை தீர குத்தலாம். கொஞ்சம் பெரிய கோபம்னா ஒரு தலகாணில அவங்க பேர் எழுதி தலகாணி பிஞ்சு போற அளவுக்கு ஏதாவது செய்யலாம். கொஞ்சம் வரையத் தெரிஞ்சிருந்தா சுவத்தில கோபப்படுத்தினவங்களோட படத்தை வரையலாம், அப்புறம் உள்ளதெல்லாம் உங்க இஷ்டம்தான்.

இதுக்காகவே வீட்டில்  தனி அறை இருந்தால் நல்லதுன்னு ஓஷோ சொல்றார். நான் அனுபவத்துல சொல்றேன்,  இதுக்கான  தனி அறை ஒன்று அவசியம். இந்த முறையில ஆத்திரத்தை உள்ளேயே வைத்து புழுங்க வேண்டியதில்லை, நேரடியாக வெளிப்படுத்தி சங்கடப்படவும் வேண்டியதில்லை. இது நினைத்துப் பார்க்க கொஞ்சம் முட்டாள்தனமாக தோன்றும்.  நாம் முட்டாள்தனமாக நடந்துகொள்வது ஒன்றும் புதிதான செயல் இல்லையே?

அனுபவத்துல சொல்றேன், நான் இப்படி யாரையும் அடிச்சதில்லை. அந்த அளவு என்னை யாரும் கோபப்படுத்தியதில்லை. ஆனாலும் அனுபவத்துல சொல்றேன், என் மனைவிக்கு என் மேல் நிரந்தர கோபம் கிடையாது. அவர் ஓஷோவின் யோசனையை பின்பற்றுகிறார்.