சிவமணம் பூத்தது

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே. – (திருமந்திரம் – 1459)

விளக்கம்:
பூவினுள் வாசம் பொருந்தியிருப்பது போல நம் உயிருக்குள் சிவமணம் பூத்திருக்கிறது. இந்த விஷயம் ஒரு சித்திரத்தைப் போல் நம் மனதில் பதிந்து விட்டால் புனுகுப்பூனை அணைத்த தூண் ஆவோம்.

புனுகுப்பூனை தூணை அணத்துக் கொண்டால் அந்த தூண் மணம் பெறும். அது போல் சிவன் நம்மை அணைத்துக் கொள்வான், நாம் சிவமணம் பெறுவோம்.

(கந்தம் – வாசனை,   நாவி – புனுகுப்பூனை,    நடுதறி – நடப்பட்ட தூண்)

The flowers have fragrance within itself
Like that, our souls have the fragrance of Siva.
If we get the clear picture of this truth
We'll be like planted post, embraced by the musk cat.

திராணி இல்லாத பிராணிகள்

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. – (திருமந்திரம் – 2090)

விளக்கம்:
பெறுவதற்கு அரியதான பிறவியைப் பெற்றிருந்தாலும், நாம் அதன் அருமை தெரியாமல், பெறுவதற்க்கு அரியதான சிவபெருமானின் திருவடியை போற்றாமல் இருக்கிறோம்.

மனிதனாக பிறப்பது மிக அரிய விஷயம். அதை நாம் உணராமல் பெறுதற்கரிய சிவபேற்றை அடையும் வாய்ப்பை இழக்கிறோம்.

It is rare to get this birth
Yet we are not seeking Lord's feet.
It is rare to get birth as human
Yet we are missing the rare to get blessings of Siva.

முதலைக்கு பயந்து கரடியிடம் மாட்டிக் கொண்ட கதை

ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. – (திருமந்திரம் – 1642)

விளக்கம்:
விரதம் இருந்து தவம் செய்ய முயலாதவர் சாஸ்திரம் அறியாதவர் ஆவார். அவர்கள் உணவுக்காக பொருள் தேடி அலைந்து வருந்துகின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் ஆற்றில் கிடக்கும் முதலைக்கு பயந்து ஓடிப் போய் குட்டியை ஈன்றுள்ள கரடியிடம் மாட்டிக் கொள்வதை போலாகும்.

In fear of crocodile, they ran out of river
but get caught by the bear having a cub.
Like this the unlearned people run away from Holy practices,
They are always roaming in search for food.

உயிரின் வடிவம்

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே. – (திருமந்திரம் – 2011)

விளக்கம்:
உடலில் பொருந்தியுள்ள உயிரின் வடிவத்தை இப்படி சொல்லலாம். பசுவின் மயிர் ஒன்றை நூறாக பிளந்து, அந்த நூறில் ஒன்றை ஆயிரம் பகுதியாக்கினால் அது உயிரின் வடிவம்.

உயிரின் வடிவம், பசுவின் ஒரு மயிரில் நூறாயிரத்தில் ஒரு பங்கு. அதாவது உயிரின் வடிவம் மிகவும் நுன்மையானது, காண முடியாதது.

(மேவிய – பொருந்திய,  சிவன் – உயிர்,   கோ – பசு).

To speak about the size of the soul, it is like
splitting a cow's hair in hundred parts
and divide each part into thousand.
The size of Soul is thus one of hundred thousand parts.

விரதம் அவசியம்

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே. – (திருமந்திரம் – 56)

விளக்கம்:
பாட்டும், இசையும், பரந்து ஆடும் பொது மகளிர் ஆட்டமும் நீங்காத இந்த உலகில், அவற்றில்  மாட்டிக் கொள்ளாதவர்கள் உண்டு. அவர்கள் வேள்வி செய்யும் விருப்பம் கொண்டவராய் இருப்பர். அப்படி உறுதி இல்லாதவர் பயன் அனுபவிக்கும் இடம் சென்று சிக்கலில் மாட்டிக் கொண்டாரே.

(ஆட்டு – நடனம்,   அவனி – உலகம்,   விரதம் – உறுதி,   இகல் – சிக்கல்).

Detach from the world of song, music and prostitute's dance
Such people Seek the Holy Sacrifice to perform.
Those who don't have observance, seek the
world of desire, get caught in misery.

ஆயிர நாமங்கள் வாழ்க

சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. – (திருமந்திரம் – 34)

விளக்கம்:
வேந்தனான சிவபெருமான் தேவர்களுக்கு அருளிய மெய்நெறி, கலவையான மணம் கொண்ட கத்தூரியைப் போன்றது. நிறைந்த சுடர் போன்ற ஆயிரம் சிவ நாமங்களை நாம் ஓர் இடத்தில் இருக்கும் போதும் புகழுவோம்.  நடக்கும் போதும் புகழ்ந்து கொண்டே நடப்போம்.

(சாந்து – கலவை,  கவரியின் கந்தம் – கத்தூரி,  ஆர்ந்த – நிறைந்த,   போந்து – நடந்து).

வாசனைப் பொருளான கத்தூரி பற்றி தெரிந்து கொள்ள – http://en.wikipedia.org/wiki/Musk_deer

It is like the fragrance of the musk of the musk deer,
the true path given to Devas given by the Lord.
Like a full Glow remain His thousand names
We chant them while sitting and while walking too.

திருவடி சரணம்

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே. – (திருமந்திரம் – 43)

விளக்கம்:
சிவன் அடியை போற்றுவோம். அவன் அருள் கிடைக்க வேண்டுமென்று அரற்றி அழுவோம். அவன் திருவடியையே தினமும் நினைத்திருப்போம். மன உறுதியுடன் சிவன் திருவடியின் நினைவில் ஒதுங்கி இருக்க வல்லவர்க்கு அவன்  அடி எடுத்து நெருங்கி வருவான். நம்மிடையே நிறைந்து நிற்பான்.

(அரன் – சிவன்,   பரன் – கடவுள், உரன் – மன வலிமை,    நிரன் – நெருங்கி).

We speak of Siva's Holy Feet, weep and cry for his Grace
We think of His Holy Feet everyday.
For those who can surrender him, with strength of will
He comes close to them and pervade them.

பிதற்றுவதை விட மாட்டேன்

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. – (திருமந்திரம் – 38)

விளக்கம்:
பெரியவன், அரியவனான சிவபெருமானைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

பிறப்பில்லாத உருவம் கொண்ட அவனைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

புகழ் பெற்ற எங்கள் நந்தியைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

என்னைப் பெருமை செய்தவனான அவனைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

(பேர் – புகழ்).

I won't stop speaking of Him, the Great, the Rare
I won't stop speaking of Him, the form of unborn
I won't stop speaking of Him, the renowned Nandi
I won't stop speaking of Him, he gave reputation for me.

தாமரை முகத்தான்

சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. – (திருமந்திரம் – 27)

விளக்கம்:
‘என்னை நேராகப் பார்’ என்று ஈர்க்கும்படியான தாமரை போன்ற முகம் கொண்டவன் ஈசன். முடிவில்லாத ஈசன் அருள் நமக்கே என்று நாள்தோறும் நந்தியை வணங்குகிறோம். அப்படி வணங்கப்படும் அவன் நம் மனத்தினில் புகுந்து நின்றானே.

(சந்தி – நேருக்கு நேராக பார்த்தல்,  அந்தம் – முடிவு,   புந்தி – மனம், அறிவு).

The Lotus like face of Siva, urge us to face it
For getting His endless Grace
We pray Nandi Daily, into our heart
the Lord Siva comes and stands there.

வண்ண வண்ணமாய் சிவபெருமான்

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
புந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே. – (திருமந்திரம் – 46)

விளக்கம்:
“அந்தி நேர  வானத்தைப்  போன்ற சிவந்த மேனியை உடையவனே, அரனே, சிவனே” என்று பண்பட்ட அடியார்கள் சிந்தனை செய்து தொழுவார்கள்.

நாம் அந்த சிவபெருமானை “பழமையானவனே, எங்கும் நிறைந்திருக்கும் முதல்வனே” என்று தொழுவோம். ஞான வடிவான அவன் நம் மனம் புகுவான்.

(திருந்து – பண்பட்ட,  புந்தி – ஞானம்,   பரன் – நிறைந்திருப்பவன்).

Oh Hara! Oh Siva! you have a hue of sunset
Thus the reformed devotees think of Him and Pray.
He is the Earliest one! Primary of all! Spread over every thing
Thus we praise Him, He feature as Wisdom in our heart.