குருவை நிந்திப்பவர் நந்தியின் தண்டனைக்கு ஆளாவர்!

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.  –  (திருமந்திரம் – 532)

விளக்கம்:
கற்புடைய பெண்கள், சிவபக்தர்கள், தத்துவ ஞானம் கொண்ட குருக்கள் ஆகியோரை மனம் கலங்கச் செய்பவர்கள், ஒரு வருடத்திற்குள் தங்கள் செல்வத்தையும் உயிரையும் இழப்பார்கள்.  இது நந்தி தேவனின் ஆணை.

குருவை நிந்திப்பவர்கள் நாயாகப் பிறப்பார்கள்

ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம்
பாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.  –  (திருமந்திரம் – 531)

விளக்கம்:
ஓரெழுத்தான பிரணவத்தை மனம் உணரும் விதமாகக் கற்றுக்கொடுத்த குரு மதிப்புக்கு உரியவர் ஆவார். அவரை வாழ்த்தி வணங்க வேண்டுமே அன்றி அவர் மனம் நோகும்படியாக எதுவும் பேசி விடக்கூடாது. மதிப்பிற்குரிய குருவை மனம் நோகப் பேசுபவர்கள் தங்களது அடுத்தப் பிறவியில் ஊருக்குள்ளே சுற்றி வரும் தெருநாயாகப் பிறப்பார்கள். அவர்களது வாழ்நாள் இங்கே ஒரு யுகமாகக் கழியும். கடைசியில் ஒரு புழுவைப் போல மண்ணோடு மண்ணாகப் போவார்கள்.

 

குருநிந்தனை கூடாது!

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.  –  (திருமந்திரம் – 530)

விளக்கம்:
ஞானம் பெற்ற உயர்ந்த சிந்தனை கொண்டவகளை குருவாக ஏற்று வணங்க வேண்டும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை மதிக்காதவர்கள் கீழ் மக்கள் ஆவார்கள். இவர்கள் உடன் இருப்பவரையும் மனம் நோகும்படி பேசி வருந்தும்படிச் செய்வார்கள். கற்று அறிந்தவரைத் தேடிச் சென்று, அவரைச் சார்ந்து இருந்து அவரிடம் இருந்து ஞானம் பெறுபவர் அடையும் பயன் அளவில்லாதது.

காமமும் சிவநிந்தனையே!

போகமும் மாதர் புலவி அதுநினைந்து
ஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.  –  (திருமந்திரம் – 529)

விளக்கம்:
எல்லாம் ஈசனே நினைத்து ஒழுக்க நெறியில் நில்லாமல், பெண் சுகத்தையே நினைத்து அதிலேயே மூழ்கியவாறு உள்ளோம். வேதம் உரைக்கும் வேதியர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். பெண் சுகத்தை நினைத்து ஈசனை மறப்பதும் சிவநிந்தனையே ஆகும்.

பகை கொண்ட மனம்!

அப்பகை யாலே அசுரரும் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.  –  (திருமந்திரம் – 528)

விளக்கம்:
அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் ஏற்பட்ட பகையாலே இரு தரப்பும் தங்களது சண்டையில் இறைவனை மறந்து விட்டார்கள். மனத்தில் பகை கொண்டவர்களால் இறைவனை அடைய முடியாது. இறைவனிடம் பொய்யாகக் கூட பகை கொள்ளக்கூடாது. சிவனிடம் கொள்ளும் பொய்ப்பகை மற்ற பகையை விட பத்து மடங்கு தீமை விளைவிக்கக் கூடியது. அப்படியானால் நிஜமாகவே சிவனை பகைத்தாலோ, நிந்தனை செய்தாலோ, அதனால் ஏற்படும் தீமையின் அளவை எண்ணிப் பாருங்கள்.

குளிர்ந்த மனம் வேண்டும்!

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்ககு அல்லது தாங்கஒண் ணாதே.  –  (திருமந்திரம் – 527)

விளக்கம்:
அமுதினில் ஊறிய கனிந்த மனம் கொண்டவன் நம் ஆதிப்பிரானான சிவபெருமான். உலர்ந்த மனம் உடையவர்களால் அவனை அடைய முடியாது. வானவரே ஆனாலும் கோபம் கொண்டவர்கள் மனம் உலர்ந்தவர் ஆவார்கள். அவர்களால் உண்மையான ஞானத்தை உணர முடியாது. குளிர்ந்த மனமே உண்மையான ஞானத்தை ஏற்றுக்கொள்ளும்.

முளிந்தவர் – உலர்ந்தவர், தளிந்தவர் – குளிர்ந்தவர், விளிந்தவர் – கோபம் கொண்டவர், அளிந்து – கனிந்து.

சிவ நிந்தனை கூடாது!

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளியுறு வார்அம ரர்பதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூசையின் கீழது வாமே.  –  (திருமந்திரம் – 526)

விளக்கம்:
தெளிவான ஞானம் பெற்றவர்கள் சிவனடியை நினைத்து, அதை அடைவதற்கான வழியில் செல்வார்கள். அவர்களது சிந்தையின் உள்ளே சிவபெருமான் வந்தமர்ந்து அருள் செய்வான். சிவபெருமானை சாதாரணமாக நினைத்து, அவனை இகழ்ந்திடும் நீசர்கள் பூனையின் கையில் அகப்பட்டக் கிளி போல துன்பப்பட்டு அழிந்து போவார்கள்.

உலகின் மிகப்பெரிய மலர்

அதோமுகம் மாமல ராயது கேளும்
அதோமுகத் தால் ஒரு நூறாய் விரிந்து
அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி
அதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே.   – (திருமந்திரம் – 525)

விளக்கம்:
மிகப்பெரிய மலராக மலர்ந்து நிற்கும் சிவபெருமானின் அதோமுகத்தின் அழகைப் பற்றிக் கேளுங்கள். அம்முகம் நூறு இதழ்களைக் கொண்ட பெரிய மலராக விரிந்து நிற்கிறது. பார்க்க மலரைப் போல இருந்தாலும் அதோமுகத்தின் சக்தி முடிவில்லாதது. அளவில்லாத அந்த சக்திக்குக் காரணம் அம்முகம் நம் சிவபெருமானுடையது ஆகும்.

அதோமுகன்!

அதோமுகம் கீழண்ட மான புராணன்
அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத் து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனு மாமே.   – (திருமந்திரம் – 524)

விளக்கம்:
மிகப் பழமையானவன் நம் சிவபெருமான். அவன் தனது அதோமுகத்தின் கீழே இந்த உலகத்தைப் படைத்திருக்கிறான். அவனே இந்த உலகமாக இருக்கிறான். இவ்வுலகின் அனைத்து உயிர்களிலும் கலந்திருந்து அவற்றை இயக்குகிறான். அதோமுகமாக இயங்கும் அதே சிவபெருமான்தான் தாமரை மலரை மாலையாக அணிந்துள்ள நான்முகன் பிரமனாகவும் விளங்குகிறான். பிரளயத்தால் இந்த உலகம் அழியும் காலத்தில் ஊழித்தலைவனாக நிற்பதும் நம் சிவபெருமானே!

உந்து சக்தியாக நிற்கும் அதோமுகம்!

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும்
உந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுகம் ஆமே.   – (திருமந்திரம் – 523)

விளக்கம்:
மூலாதாரத்தில் எழுந்து சுழுமுனை வழியாக ஓங்கி வளரும் நந்தியம்பெருமான் சகஸ்ரதளத்தில் செந்தீயாகச் சுடர் விடும் போது சிவனென நிற்பார். அங்கே சிவபெருமானின் அதோமுகம் வெளிப்படும். அந்தி நேரத்தின் நிறம் கொண்ட சிவபெருமானின் அதோமுகம் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் உந்து சக்தியாகக் கலந்திருந்து வலம் வருகிறது.