இறைவா போற்றி!

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.  – (திருமந்திரம் – 352)

விளக்கம்:
வானுலகில் உள்ள தேவர்கள் எல்லாம், தமக்குத் துன்பம் நேரும் போதெல்லாம், மனம் வருந்தி, வாடிய முகத்துடன், தமது ஆணவமெல்லாம் ஒடுங்கிய நிலையில், ‘இறைவா போற்றி’ என்று சிவபெருமானை வணங்கினர். அப்போது ஈடு இணையில்லாத புகழுடைய சிவபெருமான், தன்னை வணங்கிய தேவர்களை எல்லாம் துன்பங்களில் இருந்து மீண்டு எழுந்து வரச்செய்தான்.


தண்டீசனின் கதை

உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.  – (திருமந்திரம் – 351)

விளக்கம்:
இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்தவன் தண்டீசன். அவன் ஒளி மிகுந்த மணல்களைச் சேர்த்து ஒரு லிங்கம் செய்து, அந்த மணல் லிங்கத்தை பசும்பாற் குடங்களால் வழிபட்டான். பசும்பால் வீணாவதைப் பார்த்துக் கோபப்பட்ட சண்டீசனின் தந்தை, அவனைக் கம்பால் அடித்தான். ஆனால் சிவபக்தியில் இருந்த சண்டீசனுக்கு தந்தை கொடுத்த அடி உறைக்கவில்லை. அதனால் மேலும் கோபம் கொண்ட அவனது தந்தை அந்த மணல் லிங்கத்தைக் காலால் எட்டி உதைத்தான். தந்தையின் இந்த செயலால் கோபம் கொண்ட தண்டீசன், பசுவை மேய்க்க வைத்திருந்த கம்பை கையில் எடுக்க, அந்தக் கம்பு மழு என்னும் ஆயுதமாக மாறியது. அந்த மழுவால் தன் தந்தையின் இரண்டு கால்களையும் வெட்டினான். தண்டீசனின் பக்தியைப் பார்த்த சிவபெருமான், தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் தண்டீசனுக்கு அணிவித்தான்.

தண்டீசன் சண்டேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.


சிவன் அருள் பெற்ற இராவணன்

தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.  – (திருமந்திரம் – 350)

விளக்கம்:
இருபது தோள்களை உடைய இராவணன் கயிலாய மலையை பெயர்க்க பெரிய ஆற்றலுடன் முயற்சி செய்த போது, சிவபெருமான் தனது கால்களை சிறிது அழுத்த, வலி தாங்காமல் கதறி, தனது சிறுமையை உணர்ந்தான். ‘இறைவா’ என்று வருந்தி அழைத்த பிறகு, இராவணனுக்கு நீங்காத அருள் செய்தான்  சிவபெருமான்.

காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம், டம்பம், தர்ப்பம், அசூயை, இரீஷை ஆகிய பத்துத் தலைகள் கொண்டவன் இராவணன். அவன் சிவபெருமானின் வலிமையைப் பார்த்த பிறகு தனது சிறுமையை உணர்ந்தான். சிறுமையை உணர்ந்த அவனுக்கு நீங்காத இறைபக்தியை சிவபெருமான் அளித்தான்.


யார் பெரியவர்?

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி
வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே. – (திருமந்திரம் – 349)

விளக்கம்:
பிரமனும் திருமாலும் தமக்குள் யார் பெரியவர் என்கிற போட்டியில், இருவரும் வலிமையுடன் போரிட்டுக் கொண்டார்கள். அவர்கள் முன்பு சிவபெருமான் ஒளிமயமாகத் தோன்றிய போது, இருவரும் தங்கள் தவற்றை உணர்ந்தார்கள். சிவபெருமான் திருமாலுக்கு சக்கரத்தையும், பிரமனுக்கு தண்டாயுதத்தையும் வழங்கி, காத்தல், படைத்தல் ஆகிய செயல்களைச் செய்யும்படிப் பணித்தான்.

தியானத்தின் போது குண்டலினி சக்தி, பிரமன் வசிக்கும் மூலாதாரத்திலும், திருமால் வசிக்கும் மணிப்பூரகத்திலும் நின்று விடாமல், சிரசின் மேல் இருக்கும் சிவனுடைய இடத்தை அடைய வேண்டும். அதுவே உயர்ந்த இடம்!


சக்தியின் தவம்

அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.  – (திருமந்திரம் – 347)

விளக்கம்:
மலையரசன் மகளாகப் பிறந்த சக்தியானவள், சிவபெருமானின் திருவடியை அடைவேன் என உறுதி கொண்டாள். அப்பெருமானை நோக்கி உறுதியான தவம் செய்து முறையாக அர்ச்சனை செய்து வழிபட்டாள். அந்த வழிபாட்டை கண்டு தேவர்கள் மகிழ்ந்தனர்.

நமது மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி சக்தி, உச்சந்தலையின் இடது பாகத்தில் விளங்குகின்ற சிற்சித்தியைச் சென்று சேர்வதே தவமாகும்.