மாதம் தோறும் வெளி வரும் ஒரு பக்தி மாத இதழுக்கு வந்த ஒரு வாசகர் கடிதம் இது.
ஆசிரியர் ஐயா அவர்களுக்கு,
கோடி நமஸ்காரங்கள். இந்த பரந்த பிரபஞ்சத்தில் உள்ள இறைவனின் படைப்புகளில் அடியேன் ஒரு சிறியவன். மாதந்தோறும் வரும் உங்கள் பத்திரிகையை நான் வாரந்தோறும் வாங்கி விடுவேன். தீவிர வாசகன் நான். வாசகன் என்றால் பல்லக்கு தூக்குபவன் என்று அர்த்தம் என்பது தங்களுக்கு தெரியும் தானே. (பாடை தூக்குபவன் என்றும் அர்த்தம் உண்டு. நாம் அதை இங்கே எடுத்துக்கொள்ள வேண்டாம்). முன்பெல்லாம் நான் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஒரு முறை வெளியூர் பயணத்திற்காக என் மனைவி உங்கள் பத்திரிகை ஒன்றை வழியில் படிக்க எடுத்து வைத்திருந்தார். நான் கோபத்தில் கடுமையாக திட்டி அதை கொண்டு வரக்கூடாது என்று சொல்லி விட்டேன். பேருந்து நிலையத்தின் கடை ஒன்றில் ஜூனியர் விகடன் கேட்டேன். வாங்கும் நேரம் பேருந்து கிளம்பி விட்டதால் புத்தகத்தை சரியாக பார்க்கவில்லை. பிறகு தான் பார்த்தேன், வீட்டில் நான் வேண்டாமென்று சொன்ன அதே புத்தகம் அது. அட்டையில் ஐயப்பன் படம், என்னைப் பார்த்து சிரித்தவாறு. வேகமாக திரும்பி அந்த கடைக்காரரை பார்த்தேன். அவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தார், என்னைப் பார்த்து ஒரு தெய்வீக சிரிப்பு சிரித்தார். இப்போது நினைத்தாலும் புல்லரிக்க வைக்கும் சம்பவம் அது.
அன்றிலிருந்து உங்கள் பத்திரிகையை தவறாமல் வாங்கி விடுகிறேன். கையில் காசில்லா விட்டாலும் வித்தால் போதும் என்று கடைக்காரர் கொடுத்து விடுகிறார். பக்தி வந்தவுடன் எந்த கோவிலுக்கு போவது என்று தெரியாமல் இருந்தேன். அதற்கும் உங்கள் பத்திரிகை தான் வழி காட்டிற்று. கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கத்தை திறப்பேன், அந்த பக்கத்தில் எந்த கோவிலைப் பற்றி இருக்கிறதோ அந்த கோவிலுக்கு கிளம்பி விடுவேன்.
ஒரு சொம்பு நிறைய பாயாசம் கொடுத்து, அதில் எந்த துளியில் அதிக இனிப்பு என்று கேட்டால் எப்படி சொல்ல முடியாதோ அது போல உங்கள் பத்திரிகையில் எந்த பகுதி சிறப்பு என்பதும் சொல்ல முடியாது. ஆனாலும் அதில் வரும் ராசி பலன் பகுதியை முந்திரி பருப்பென்பேன். அது என் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த வழி காட்டியாக உள்ளது. ஒரு மாதம் எனக்கு கெடுதலான பலன்களாக போட்டிருந்தது. பரிகாரமாக திருநங்கைகளுக்கு உதவச் சொல்லியிருந்தது ஆறுதல் அளித்தது. ஆனாலும் அந்த நேரம் திருநங்கை யாரும் தென்படவில்லை. அதற்காக பரிகாரம் செய்யாமல் இருக்க முடியுமா? இதெற்கெல்லாம் செலவு பார்த்தால் முடியுமா? இப்போது மருத்துவம் எவ்வளவு முன்னேறியிருக்கு?
என்னுடைய நிறைய ஆன்மீக சந்தேகங்களுக்கு உங்களுடைய பதில்கள் எனக்குள் அறிவு வெளிச்சத்தை பாய்ச்சி உள்ளது. அந்த சந்தேகங்களில் சில இவை.
- பாம்புக்கு மோதிரம் போட்டால் நாக தோஷம் தீரும் என்று கேள்விப்பட்டேன். அது எந்த கிழமையில் செய்யலாம்?
- கனவில் கழுதை ஒன்று என்னைப் பார்த்து சிரித்தது. அதன் பலன் யாது?
- அவிட்ட நட்சத்திரக்காரர் ஆயில்ய நட்சத்திரக்காரரை விவாகரத்து செய்யலாமா?
- வாய்க்கசப்பு ஏற்படுவது மனக்கசப்பு நீங்கிடும் அறிகுறி என்கிறார்களே? உண்மையா?
- 108 விளக்கு ஏற்றினால் விவாதத் தடை நீங்கும் என்று சொல்லியிருந்தீர்கள். ட்விட்டரில் உள்ளவர்கள் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?
எனக்கு தொழில் நிலம் வாங்கி விற்பது. முதலில் சிறிய வருமானமாக இருந்த நேரம், வழக்கம் போல உங்கள் பத்திரிகை வாங்க கடைக்குப் போனேன். கடைகாரர் தவறுதலாக முந்திய மாத புத்தகத்தை கொடுத்து விட்டார். நானும் வீட்டுக்கு வந்து தான் கவனித்தேன். அப்போது தோன்றிய பிசினஸ் ட்ரிக்தான் தான் இது. ஏற்கனவே விற்ற நிலத்தை இன்னொருவருக்கு விற்றேன். மாட்டிக்கொள்ள இருந்தேன். அந்த நேரம் முதலில் வாங்கியவர் இறந்து விட்டார். அவர் சார்பில் யாரும் இதை தெரிந்திருக்கவில்லை. நான் தப்பித்தேன், கடவுள் நம்பிக்கை கூடிற்று. இப்போது கோடிக்கணக்கில் குவித்து விட்டேன். எல்லாவற்றிற்கும் காரணம் உங்கள் பத்திரிகைதான். பத்திரிகை நின்று விடக்கூடாது என்பதற்காக மாதம் நூறு பிரதி வாங்கி வைக்கிறேன் இப்போது. சர்க்குலேஷன் போதவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் வாங்கி குவிக்கிறேன்.
இப்போது ஒரு சின்ன பிரச்சனை, உங்களால் கண்டிப்பாக ஆலோசனை சொல்ல முடியும். கிரக நிலை இப்போ சரியில்லை போல. மோசடி செஞ்சிட்டேன்னு சொல்லி போலீஸ்ல தேடுறாங்க, என் பேர்ல நிறைய கேஸ் இருக்கு. சட்டப் பிரச்சனைக்கு சட்டநாதரை வணங்கினால் தீர்வு உண்டு என்று உங்கள் கட்டுரை ஒன்று படித்தேன். அதைப் பற்றி இன்னும் சில விபரங்கள் தேவை.