மனம் ஒன்றினால் அறிவு கூர்மை பெறும்

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே – 757

விளக்கம்:
யோகப்பயிற்சியில் மனம் ஒன்றினால் வளர்ச்சி பெறலாம் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். யோகத்தில் மனம் ஒன்றும் போது, அறிவு கூர்மை அடைவதை உணரலாம். கூர்ந்த அறிவுடன் கூத்தனாகிய சிவபெருமானைப் பற்று கொண்டு துதித்தால், எட்டுத் திசைகளிலும் தாமரை மலர்வதைப் போல சிவம் தோன்றுவதைப் பார்த்து மகிழலாம். தொடர்ந்த இப்பயற்சியால் நூறு ஆண்டு காலம் குறைவின்றி வாழலாம்.


ஒன்றில் வளர்ச்சி!

ஒன்றில் வளர்ச்சி உலப்புஇலி கேள்இனி
நன்றுஎன்று மூன்றுக்கு நாள்அது சென்றிடும்
சென்றிடும் முப்பதும் சேர இருந்திடில்
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனும் ஆமே – 756

விளக்கம்:
யோகப்பயிற்சியின் போது, மனம் அப்பயிற்சியில் ஒன்றி நிற்க வேண்டும். அதனால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதவை. முதலில் மூன்று நாட்கள் மனம் ஒன்றி நிற்கும் நிலையை முயற்சி செய்து பார்ப்போம். பிறகு அந்த மூன்று நாட்களை முப்பது நாட்களாக நீடிக்கச் செய்வோம். தொடர்ந்து மனம் ஒன்றி யோகப்பயிற்சி செய்யும் போது, நம் தலை உச்சியில் கூத்தனாகிய சிவபெருமான் பொன் போல் திகழ்வதை உணரலாம்.


சாத்திரத்தின் பலன்களைத் தலையில் உணரலாம்

கூத்தன் குறியில் குணம்பல கண்டவர்
சாத்திரம் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந்து உள்ளே அனுபோகம் நோக்கிடில்
ஆத்தனும் ஆகி அமர்ந்திடும் ஒன்றே – 755

விளக்கம்:
கூத்தனாகிய நம் சிவபெருமானைக் குறித்து, யோகநிலையில் பலவித அனுபவங்களை உணர்ந்தவர்கள் சிவயோகி ஆவார்கள். சாத்திரங்களைப் படிப்பதால் ஏற்படும் பலனை, தமது சகசிரதளத்தில் அனுபவமாக உணர்வார்கள். தொடர்ந்து சிவபெருமானைக் குறித்துத் தியானம் செய்து திளைப்பவர்களுக்கு, அந்த சிவபெருமான் நண்பனாக வந்து உள்ளே அமர்வான். இதை விட வேறு என்ன பேறு வேண்டும்?


சுழுமுனையில் சிவன் நிற்கிறான்

சுழல்கின்ற ஆறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடும் தன்னுள் இலாமல்
கழல்கண்டு போம்வழி காண வல்லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனும் ஆமே – 754

விளக்கம்:
காலச்சக்கரம் என்பது ஒரு சுழல்கின்ற ஆறு ஆகும். அந்த ஆற்றுச் சுழலில் சிக்கித் தவிக்காமல் தப்பிக்க நமக்கு இருக்கும் ஒரே துணை சிவபெருமானின் திருவடியாகும். நெருப்பில் அழியப் போகும் இந்த உடலின் மீது பற்று கொள்ளாமல், யோக வழியில் நின்று சிவன் திருவடியைக் காணும் வழியைத் தெரிந்து கொள்வோம். யோகத்தின் போது சுழுமுனையில் கவனம் செலுத்தினால், அந்தத் தண்டினில் கூத்தனாகிய சிவபெருமான் இருப்பதை உணரலாம்.


அறிவு பெண்களின் பின்னே செல்ல வேண்டாம்

பிணங்கி அழிந்திடும் பேறுஅது கேள்நீ
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே – 753

விளக்கம்:
யோகவழியில் செல்லாமல் உடலையே பெரிதாக நினைப்பவர்களுக்கு இறுதியில் மரணம் துன்பம் தருவதாக இருக்கும். அவர்களது அறிவு பெண்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்பதால், அரும்பாடு பட்டு எடுத்து வந்த இந்தப் பிறவியை வீணாக்குகிறார்கள். யோகம் செய்ய மறுப்பவர்களின் வாழ்க்கை, இறுதியில் ‘நாய்க்கு உணவாகத் தான் இந்த வாழ்க்கையா?’ என்பது போல் இருக்கும்.

 


முதுகுத் தண்டுடன் ஓடித் தியானம் செய்வோம்

தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டலம் மூன்றும் மகிழ்ந்துஉடல் ஒத்திடும்;
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே – 752

விளக்கம்:
யோகநிலையில், குண்டலினியை முதுகுத்தண்டு வழியாக ஏற்றி சகசிரதளத்தை அடையச் செய்பவர்கள் சிவயோகி ஆவார்கள். அவர்களது உடலில் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று மண்டலங்களும் தக்கவாறு அமைந்திருக்கும். இதை அனுபவத்தில் உணர்ந்த சிவயோகிகளுக்கு காலச்சக்கரம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதை உணராத மற்றவர்கள் வினைப்பயனால் கிடைத்த உடலைப் பெரிதாக நினைத்து, இறுதி காலத்தில் உடலை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் துன்புறுகிறார்கள்.


ஓவியம் ஆன உணர்வை அறிவோம்

ஓவியம் ஆன உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயன் அறிவாரில்லை;
தீவினை யாம்உடல் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே – 751

விளக்கம்:
தொடர்ந்து யோகப்பயிற்சி செய்து, ஓவியம் போன்ற சலனம் இல்லாத மனநிலையை அடைவோம்.  பூவில் இருக்கும் தண்டு போல, மனம் சுழுமுனையில் ஒடுங்கி நிற்கும் போது, பழைய தீவினைகளால் உருவான நம்முடைய உடல் புண்ணியம் பெற்று அக்கினி, திங்கள், கதிரவன் ஆகிய மூன்று மண்டலங்களிலும் பொருந்தி விளங்கும். யோகநெறி அறியாத பாவிகளுக்கு இதன் பலன் புரியாது.


சலனம் இல்லாத மனநிலையை அடையலாம்

நண்ணும் சிறுவிரல் நாண்ஆக மூன்றுக்கும்
பின்னிய மார்புஇடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியில் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியந் தானே – 750

விளக்கம்:
யோகப்பயிற்சியின் போது, இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளும் சிறு விரல்கள் ஒன்றை ஒன்று பின்னிக்கிடப்பதைப் போல நமது மார்பில் பெயராமல் ஒத்து இயங்கும். அப்படி ஒருமை பெற்றால் அம்மூன்று நாடிகளும் சகசிரதளத்தில் கூடி நின்றிடும். அப்படி ஒரு நிலை வாய்க்கக் பெறும்போது, ஓவியம் போல் எந்தவித சலனமும் இல்லாத மனநிலையை அடையலாம்.


உடலில் வலு இருக்கும் போதே யோகம் பயில்வோம்

முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்குஎரி கொண்டு
கடிந்துஅனல் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே – 749

விளக்கம்:
யோக வழியில் நிற்பவர்கள், தமது கவனத்தைக் குண்டலினியில் நிறுத்திப் பயிற்சி செய்ய வேண்டும். அகலில் எண்ணெய் இருக்கும் போதே திரியைத் தூண்டி விளக்கை எரிய வைப்பதைப் போல, நமது உடலில் வலு இருக்கும் போதே மூலாதாரம் என்னும் அக்கினியைத் தூண்டி விட்டு குண்டலினி சகசிரதளத்தை அடையச் செய்யவேண்டும். அப்படிச் செய்ய வல்லவர்கள் காலச்சக்கரத்தின் சுழற்சியில் சிக்காமல், நிலைபெற்று வாழ்வார்கள்.

முடிந்தது அறியார் – தமது கவனத்தைக் குண்டலினியின் இயக்கத்தோடு முடிச்சு போட்டவாறு வைத்திருக்கத் தெரியாதவர்.


பயிலும் யோகம் பற்றி வெளியே பெருமை பேச வேண்டாம்

முறைமுறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில்
இறைஇறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரணம் மற்றொன்றும் இல்லை
பறைஅறை யாது பணிந்து முடியே – 748

விளக்கம்:
யோகமுறைகள் பற்றி யோகநூல்களில் சிறிது மறைபொருளாகவே சொல்லபடுகின்றன. அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை, யோகம் பயில்பவர்கள் யோகமுறைகளை தமது அனுபவத்தின் மூலம் ஆராய்ந்து யோகநிலையில் முன்னேற வேண்டும். அவர்களுக்கே இறைவன் உள்ளே நிரந்தரமாகத் தங்குவான். தமது யோகப்பயிற்சியைப் பற்றி, பிறரிடம் பெருமை பேசாமல், அதை தனி அனுபவமாகப் பணிவுடன் செய்வதே சிறந்ததாகும்.