தாயை விட மேலானவன்!

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே – 811

விளக்கம்:
அண்ணாக்கில் மனம் ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால், நம்முள்ளே சிவன் கோயில் கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். அந்தக் கோயிலில் குடி கொண்டிருக்கும் சிவன், இந்த உலகத்துக்கே தாய் போன்றவன், சொல்லப்போனால், தாயை விட மேலானவன். சிவபெருமான் சினம் கொண்டவர் என்றாலும் நல்லவர். தன் மேல் கோபம் கொண்டவர்கள் உள்ளும் சிவன் குடியிருப்பார், ஆனால் அவர்களால் அதை உணர முடியாது. தீவினையாளர்களுக்கு, சிவபெருமான் தீயை விடத் தீமைகளைக் கொடுப்பார்.

தரணி – உலகம், காயினும் – சினந்தாலும், காய்ந்தவர் – சினந்தவர்


சிவனின் கோயில் நம்முள்ளே!

வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே – 810

விளக்கம்:
கேசரியோகம் செய்பவர்களுக்கு, வான கங்கை நீரைப் பருகும் நல் வாய்ப்பு அமையும் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். அவ்வாறு சிவனருள் வாய்ந்து, அந்த சிவனை மனத்துள்ளே வைத்து வழிபடுபவர்களுக்கு, சிவன் கருணை பொழிவான், அறிவு மினுங்கப் பெறும். வான்கங்கை பாயப் பெற்று, படிக்கதவு ஆகிய அண்ணாக்கில் மனம் ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால், நம்முள்ளே சிவன் கோயில் கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம்.

காய்ந்த அறிவு – மினுங்கும் அறிவு, படிக்கத வொன்றிட்டு – படிக்கதவு ஒன்றி, கூய்ந்தறி – கூர்ந்து அறி


கங்கையாகிய வான் நீர்!

ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே – 809

விளக்கம்:
உள்நாக்கின் பக்கத்தில் இருக்கும் அண்ணாக்கில் குண்டலினி சக்தியை மேலே ஏற்றி உடலில் சுரக்கும் இனிய அமுத நீரை சிவாயநம என்று சொல்லி, அந்நீரை வீணாகாமல் காக்க வேண்டும். அப்படி ஊறும் அமுதத்தைக் காத்து பயிற்சி செய்து வந்தால், கங்கை நீராகிய உச்சியில் சுரக்கும் அமுத நீரை பருகலாம். கேசரியோகம் செய்பவர்களுக்கு அந்த நல் வாய்ப்பு அமையும்.

ஊனீர் – உடலில் சுரக்கும் அமுத நீர், உண்ணா – உள் நாக்கு, தேனீர் – தேன் போன்ற இனிய அமுத நீர், கானீர் – சுரக்கும் அமுத நீரை காத்தல், வானீர் – வானத்தில் இருந்து சுரக்கும் அமுத நீர்


இனிப்பான கரும்பு போன்ற கேசரியோகம்

தீங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்
ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக்
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே – 808

விளக்கம்:
கேசரியோகப் பயிற்சி செய்வது, இனிப்பான கரும்பைக் கடித்துச் சாப்பிடுவதற்கு ஒப்பானது. பயிற்சியில் நின்று குண்டலினி சக்தியின் அரும்பு போன்ற நாவை மேலே ஏற்றுவோம். வளைந்திருக்கும் கோங்கின் அரும்பைப் போன்ற அமைப்பில் இருக்கும் குண்டலினியை நேராக நிறுத்தி பயிற்சி செய்தால், உடல் என்னும் இந்தக் கரும்பிலே இனிய நீராகிய அமுதம் சுரப்பதைக் காணலாம்.

தீங்கருமபு – இனிப்பான கரும்பு, கோங்கரும்பு – கோங்கு + அரும்பு, கோண் – வளைவு, ஊன்கரும்பு – உடல் எனும் கரும்பு


எமனுக்கே இடம் இல்லை! துன்பத்துக்கு ஏது இடம்?

தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை யாடிய தீங்கரும் பாமே – 807

விளக்கம்:
நாமெல்லாம் நம்முடைய தீவினைகளின் பலனாக வரும் துன்பங்களைப் பார்த்து திகைத்து நிற்கிறோம். தீவினைகளில் இருந்து விடுபட, நாம் கேசரியோகம் பயின்று, குண்டலினி சக்தியின் மேல் நோக்கிய நாவைக் குறித்து தியானம் செய்வோம். கேசரியோகம் பயில்பவர் இடத்தில் எமனுக்கே வேலை இல்லை, துன்பத்துக்கு ஏது இடம்? தூய்மையான வழியான யோகத்தின் பலன்களைக் கண்டவர்கள், தீங்கரும்பாகிய தெய்வத்தின் அருளைப் பெறுவார்கள்.

பா – தூய்மை, தே – தெய்வம்


யோகத்தின் போது மனம் ஒருமித்து இருக்க வேண்டும்

நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே – 806

விளக்கம்:
நந்தியம்பெருமானின் வழிகாட்டுதலின் படி, குண்டலினியின் நாவு மேலே நோக்கிச் செல்லுமாறு கேசரியோகப் பயிற்சி செய்வோம். குண்டலினி சக்தியை மேலே ஏற்றியவர்களுக்கு இந்த உலகமே வசப்படும். கேசரியோகத்தின் போது, மனத்தை ஒருமுகப்படுத்தி, உடலில் சுரக்கும் அமுதத்தை தேக்க வேண்டும். உலக விஷயங்களில் மனத்தை அலைய விட்டு, கவனம் சிதறி, உள்ளே ஊறும் அமுதத்தை வெளியேறும் முச்சுக்காற்றில் போக விட்டால், அதுவும் தீவினையே ஆகும்.

தரணி – பூமி, பந்தித்திருக்கும் – கட்டுண்டு இருக்கும், பகலோன் – சூரியகலை எனப்படும் பிங்கலை


நரைதிரை மாறிடும்!

மேலை யணாவில் விரைந்திரு காலிடிற்
காலனும் இல்லை கதவுந் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே – 805

விளக்கம்:
சுவாசத்தின் போது விரைந்திடும் இடைகலை, பிங்கலை ஆகிய இரண்டு காற்றுக்களையும் மேல் அண்ணாக்கில் செலுத்தி பயிற்சி செய்தால், அண்ணாக்கின் மேலே உள்ள கதவு திறந்து சகசிரதளம் செல்வதற்கான வழி கிடைக்கும். சகசிரதளத்திற்கான கதவு திறக்கப்பட்டவர்களுக்கு மரண பயம் நீங்கும். தலை மயிர் நரை நீங்கி கருமை பெறும், கண் பார்வை தெளிவு பெறும். உலகத்தோர் பார்வையில் நாம் இளைஞனாகத் தெரிவோம். இது பராசக்தி அருள் பெற்ற நந்திதேவரின் ஆணை.

மேலையணா – மேலே உள்ள அண்ணாக்கு, கால் – காற்று, ஞாலம் – உலகம், பரா – சிவசக்தி


சிவ அமுதம்!

ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வாரில்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளியலு மாமே – 804

விளக்கம்:
தொடர்ந்து கேசரி யோகப்பயிற்சி செய்யும் போது நம் உடலில் அமுதம் ஊறும், அவ்வமுதம் சுழுமுனை நாடியின் உச்சிவரை பாயும். உடலில் அமுதம் ஊறும் போது, தலை உச்சியில் உள்ள சகசிரதளத்திலும் அமுதம் ஊறும். ஆனால் தலை உச்சியில் ஊறும் அமுதத்தை எல்லோராலும் உணர முடியாது. தேர்ந்த கேசரியோகப் பயிற்சியாளர்கள் மட்டுமே அதை உணர்வார்கள். தேன் போன்ற அந்த வானூறலை உண்பவர்கள் சிவானந்தம் பற்றியத் தெளிவைப் பெறுவார்கள்.

ஊனூறல் – உடலில் ஊறும் அமுதம், வானூறல் – தலையின் உச்சியில் உள்ள சகசிரதளத்தில் ஊறும் அமுதம்


சுழுமுனை நாடியில் அமுதத்தைப் பெறலாம்

நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவருந் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி யூனே – 803

விளக்கம்:
இட நாடி, வல நாடி ஆகிய இரண்டையும் சுழுமுனையில் நிறுத்தி, கேசரி யோகப்பயிற்சி செய்தால், சுழுமுனை நாடியில் அமுதத்தைப் பெறலாம். அந்த யோகநிலையில், மேல்நோக்கி இருக்கும் குண்டலினியின் நாவை லேசாக விசிறினால் அமுத ருசியைக் காணலாம், அங்கே சிவனும், நம் சீவனும் கூடி இருப்பதை உணரலாம். சிவனும் சீவனும் கூடும் இடத்தில், பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று தெய்வங்களும், முப்பத்து மூன்று கோடி தேவர்களும் தோன்றுவார்கள். இவ்வாறு நாவினில் அமுதம் தோன்றக் கிடைத்தவர்கள் நூறு கோடி வருஷங்கள் வாழ்வார்கள்.

சிவிறிடிற் – விசிறினால், சதகோடி – நூறு கோடி, ஊன் – உடல்


அமுதத்தில் நீந்தலாம்

ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே – 802

விளக்கம்:
தொடர்ந்து கேசரியோகப் பயிற்சி செய்து வந்தால், சுழுமுனையுடன் நாம் உரையாடும் நிலை வாய்க்கும். சுழுமுனையில் கவனத்தை நிறுத்தி, அதனுடன் உரையாடல் செய்யும் போது அங்கே அமுதம் சுரக்கத் தொடங்கும். அமுதம் ஊறும் இடம் சந்திரமண்டமாய் மாறும், அவ்வமுதத்திலே நாம் நீந்தலாம். யோகநிலையில் அமுதம் நின்று ஊறினால், அதுவே நம் சிவபெருமான் அருள் பாலிப்பதாகும். இதைவிட வேறென்ன வேண்டும் நமக்கு?

இரண்டாம் அடியை முதலிலும், முதல் அடையை இரண்டாம் இடத்திலும் வைத்துப் படிக்க வேண்டும்.

ஆய்ந்துரை செய்யில் – ஆராய்ந்து பார்த்தால், பாலிக்கு மாறே – அருள் பாலிக்கும்