பிராணவாயு ஒடுங்கும் முறை அறிவோம்

திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே – 720

விளக்கம்:
மூச்சுக்காற்றைத் திரட்டி பிராணாயாமம் செய்து வருவதால் சிறப்புடன் விளங்குகிறோம். ஆனாலும் பயிற்சியின் போது பிராணவாயு ஒடுங்கும் நிலையை யாரும் அறிந்து கொள்வதில்லை. தியானத்தில் ஊன்றி நின்று பிராணவாயு ஒடுங்கும் நிலையை அறிந்து கொண்டால், நந்தியம்பெருமான் வீற்றிருக்கும் அருள்வெளியில் கலந்து திளைக்கலாம்.


நம்முடைய உடலே சிவாலயம் ஆகும்

தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகச் சிவாலய மாகுமே – 719

விளக்கம்:
வானமண்டலத்தில் தேவர்களுக்காக ஒரு உலகத்தைப் படைத்தவள், தத்துவ நாயகியாகிய நம் பராசக்தி. அத்தனை சக்தி கொண்ட அப்பராசக்தி, அட்டாங்கயோகப் பயிற்சி செய்யும் நம் உடலில் தாமே ஒரு வழியை உருவாக்கி உள்ளே வந்து அமர்கிறாள். அந்த அம்மையை நாம் மதித்துத் தொழுது, அவளுடைய அருளில் திளைத்திருந்தால் நம்முடைய உடல் சிவாலயம் ஆகும்.


உள்நாடியில் ஒடுங்கி நிற்போம்

கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே அப் பங்கய மாகத்
தொடர்ந்தது தானே அச் சோதியுள் நின்றே – 718

விளக்கம்:
பிராணாயாமத்தில் நம்முடைய மூச்சுக்காற்று உள்நாடியான சுழுமுனையில் இருந்து விலகாது இருக்க வேண்டும். அந்நிலையில் நம் மூச்சு சகசிரதளத்தில் படர்ந்து அங்கே வீற்றிருக்கும் சிவசோதியுள் ஒன்றி நிற்கும். இதனால் இம்மை, மறுமை, முத்தி ஆகிய மூன்று நிலைகளிலும் பெருகுகின்ற பயன்களைப் பெறலாம்.

கிளர் பயன் – தொடர்ந்து வளர்கின்ற பயன்,   பங்கயம் – தாமரை


மூச்சுக்காற்று ஒளிமயமாய் மாறும்

சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே – 717

விளக்கம்:
இரும்பினைப் பொன்னாக மாற்றும் இரசவாதம் போல், அட்டாங்கயோகத்தில் நின்று நம் மூச்சுக்காற்றை ஒளிமயமாக மாற்ற முடியும். நடுநாடியில் கருத்தை நிறுத்திப் பெருந்தவம் செய்து மூச்சுக்காற்றை சகசிரதளத்தில் புகச்செய்தால் அக்காற்று ஒளிமயமாக மாறும். அதனால் நாம் பல சாதகங்களைப் பெறலாம்.

வேதகம் – இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதம்.


ஊக்கமுடன் தொடர்ந்து தியானம் செய்வோம்

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடும் சாதக னாமே – 716

விளக்கம்:
தியானத்தில் உண்மையாக மனம் ஒன்றி சமாதி நிலையில் நிற்பவர், தாம் எவ்வளவு நேரம் அந்நிலையில் இருந்தோம் என்பதை உணர மாட்டார்கள். அந்த அளவுக்கு மனம் அருள் வெளியில் நிலைத்திருக்கும். தொடர்ந்த பயிற்சியில், சமாதி நிலையில் இருக்கும் கால அளவு பெருகி பெருமை மிக்க சிவ ஆனந்தத்தைப் பெறுவார்கள். பிராணாயாமத்தில் ஒருங்கும் நம் மூச்சுக்காற்று ஒளி பெற்று விளங்கும். இவ்வாறு ஊக்கம் மிகுந்து தொடர்ந்து யோகப் பயிற்சி செய்பவர் சிறந்த சாதகர் ஆவார்.

ஒருக்கு – ஒருங்கு,  தருக்கு – ஊக்கம் மிகுந்து


கருத்தை நடு நாடியில் நிறுத்துவோம்

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியில்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே – 715

விளக்கம்:
தியானத்தில் நமது ஐம்பொறிகளும் நடுவழியான சுழுமுனையில் நில்லாமல், அங்கும் இங்குமாக வேறு விஷயங்களில் ஒன்றி அலைகிறது. மனத்தை பக்குவப்படுத்தி நம்முடைய கவனம் எல்லாம் நடு நாடியில் அசையாமல் நிறுத்தினால், சிரசின் மேலே சடையுடன் கூடிய சிவபெருமான் காளையில் அமர்ந்திருக்கும் காட்சியைக் காணலாம்.

புடை ஒன்றி – மனம் நேராக நில்லாமல் அருகில் உள்ள வேறு விஷயங்களில் ஒன்றுதல்.


மனம் நிலை பெறலாம்

நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
அலைவற வாகும் வழியது வாமே – 714

விளக்கம்:
தியான நிலையிலும் நம் மனம் அலைபாய்வதை நாம் அடிக்கடி உணரலாம். தியானத்தின் போது சந்திரகலைகள் பதினாறிலும் கலந்திருக்கும் சிவசக்தியை உணர்ந்தால், மனம் நிலை பெற்று முழுமையான தியான அனுபவம் பெறலாம். அந்நிலையிலே நம்முடைய மூச்சு சுழுமுனையில் நின்று நேராக இயங்கும். நம்முடைய அறிவு, காற்றில்லாத இடத்தில் ஏற்றப்பட்ட தீபம் போல சுடர் விட்டு ஒளிரும்.


கருத்து ஊன்றி தியானம் செய்வோம்

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையும்
காக்கலு மாகுங் கலைபதி னாறையும்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவும்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே – 713

விளக்கம்:
நாம் யோக வழியில் கருத்து ஊன்றி நிற்போம். கருத்துடன் தொடர்ந்து தியானம் செய்து வந்தால்,  அந்தக் கரணங்களான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியன உலக விஷயங்களில் செல்லாமல் அருள் வழியிலே நிற்கும்படியாக சிவன் அருள்வான். சித்தம் அருள் வழியில் நின்றால், பிராணாயாமத்தில் நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்று அருள் வெளியில் கலப்பதை உணரலாம். அந்நிலையிலே சந்திரகலைகள் பதினாறும் பரந்து நின்று நம்மைக் காக்கும்.


அன்பு ஒன்றே சிவனைக் காணும் வழி

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலு மாமே – 712

விளக்கம்:
நம் அண்ணலான நெற்றிக்கண் கொண்ட சிவபெருமானைக் கண்டடையும் வழியை அப்பெருமானே நமக்கு வகுத்துக் கொடுத்துள்ளான். அன்பு என்பதே அவ்வழி! அனைத்தையும் நாம் அன்பெனும் கண்ணோட்டத்திலே காண்போம். அப்படி அன்பு வழியில் நின்று தொடர்ந்து தியானம் செய்து வந்தால், சிவ அருள் வெள்ளமெனப் பெருகி வரும். அவ்வருள் நம்மை என்றென்றும் காத்து நிற்கும்.


மூச்சைக் கட்ட வல்லவர்கள்

கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தாமாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டறி வார்க்கு நமனில்லை தானே – 711

விளக்கம்:
பிராணாயாமம் செய்து மூச்சைக் கட்ட வல்லவர்கள், மறைந்திருக்கும் அருள்வெளியைக் கண்டடைந்து அங்கே மனம் லயித்திருப்பார்கள். தாமரைப்பூவிலிருந்து அதன் மணத்தை பிரிக்க முடியாது, அது போல் தியானத்திலே நமது மனம் திரிவுபடாமல் சுழுமுனையில் நிலைத்திருக்க வேண்டும். அப்படி மனம் நிலைத்து நின்று தியானம் செய்தால் குண்டலினியாகிய சக்தி புருவ மத்தியில் குத்தி மேல் ஏறுவதையும், உச்சந்தலையில் பொறி கிளம்புவதையும் உணரலாம். இவ்வாறான அனுபவங்களைப் பெற்றவர்களுக்கு மரணம் பற்றிய சிந்தனையோ பயமோ இருக்காது.