சித்திகள் மட்டுமல்ல, புத்தியும் கிடைக்கும்!

சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுள வாகுமே. – (திருமந்திரம் – 670)

விளக்கம்:
அட்டாங்க யோகம் அட்டமாசித்திகளைத் தருவதோடு நின்று விடுவதில்லை. அட்டாங்கயோகத்தால் நம் புத்தி தெளிந்து, ஞானம் கிடைக்கும். திரிபுரை எனப்படும் சக்தியே அட்டமாசித்திகளின் மொத்த உருவமாகும். அந்தப் பராசக்தியின் அருளும் அட்டாங்கயோகத்தில் நிற்பவர்களுக்குக் கிடைக்கும்.


அட்டாங்க யோகத்தால் அமுதம் பெறலாம்

எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு
விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே. – (திருமந்திரம் – 669)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தில் நின்று, வசப்படுத்தக் கடினமான மூச்சுக்காற்றை வசப்படுத்தி மூச்சுப்பயிற்சி செய்தால் அட்டமாசித்திகளைப் பெறலாம். மூச்சுப்பயிற்சியின் போது, சுழுமுனையை நமக்கு இணக்கமாகச் செய்வோம். சுழுமுனை நமக்கு இணக்கமானால், குண்டலினியை தலை உச்சிக்கு ஏற்றி அங்கே ஊறும் அமுதத்தை ருசிக்கலாம்.


இவைதான் அட்டமாசித்திகள்!

அணுமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாதல் என்றெட்டே. – (திருமந்திரம் – 668)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தினால் நாம் பெறும் அணிமா முதலான அட்டமாசித்திகள் இவையாகும்.

1. அணிமா – அணுவில் அணுவாக இருத்தல
2. மகிமா – அனைத்தையும் விட பெரிதாக இருத்தல்
3. இலகிமா – புகை போல லேசாக இருத்தல்
4. கரிமா – அசைக்க முடியாத கனம் உடையதாக இருத்தல்
5. பிராத்தி –  விரும்பியவற்றை அடைதல்
6. பிராகாமியம் – எல்லாப் பூதங்களிலும் கலந்து எழுதல்
7. ஈசத்துவம் – அனைத்தையும் ஆளும் திறன்
8. வசித்துவம் – எல்லாவற்றையும் வசியம் செய்யும் ஆற்றல்


தியானத்தினால் திருவருளைப் பெறலாம்

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடி ஒருகை மணிவிளக் கானதே. – (திருமந்திரம் – 667)

விளக்கம்:
தியானத்தின் போது நாடியின் உள்ளே மங்கல ஒலியைக் கேட்கலாம். தியானத்தில் நாம் தேடும் திருவருளைப் பெற்று அத்திருவருளின் துணை கொண்டு, நம்முள் உள்ள காமம், குரோதம் முதலான பகைவர்களைச் செயல் இழக்கச் செய்வோம். தியானத்தில் நாம் பெறும் திருவருள், ஆன்மிகத்தில் நாம் இன்னும் உயர்நிலையை அடைய மணிவிளக்காகத் துணை வரும்.


சிவனை மடக்கலாம்! வசப்படுத்தலாம்!

ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில்
மடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே. – (திருமந்திரம் – 666)

விளக்கம்:
புலன்கள் ஒடுங்கி பிராணாயாமத்தில் மனம் ஒருமைப்பட்டு இருந்தால் மூச்சுக்காற்றின் போக்கு மடங்கி அடங்கி நம் வசப்படும். பிராணாயாமத்திலேயே மனம் லயித்திருந்தால், நடங்கொண்ட கூத்தனான சிவபெருமானும் நம்மை நாடி வருவான். வந்து நம் உயிரோடு மடங்கிக்  கலந்திடுவான்.


மிடைவளர் மின்கொடி!

இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடைபடு வாயுவு மாறியே நிற்குந்
தடையவை யாறேழுந் தண்சுட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே. – (திருமந்திரம் – 665)

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது இடகலை, பிங்கலை வழியாக நாம் மூச்சை முறைப்படுத்தும் போது, நமது மூச்சின் ஓட்டம் சாந்தப்படும். மின்கொடியாகிய குண்டலினி தடை தகர்ந்து மேல் எழும். நம்முள்ளே ஒரு குளிர்ந்த ஒளி தோன்றும். அவ்வொளியில் நம் மனத்துக்கு நெருக்கமாக குண்டலினி வளர, நம் மனமும் யோகத்தில் ஒடுங்கி அமைதி பெறும்.


விரிந்த சக்தி குவிந்து சிவனோடு கூடும்

விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்கே. – (திருமந்திரம் – 664)

விளக்கம்:
முந்தைய பாடலில் பார்த்தது போல் குண்டலினியாகிய சக்தி மேலெழும் போது பல கூறுகளாகப் பிரிகிறது. பிராணாயாமத்தின் போது சக்தி நம் மூச்சில் மறைந்து கலந்து எழுந்து  குவிகிறது. மேல் எழுந்து குவிந்து நம் உச்சியில் மறைந்திருக்கும், ஐம்பூதங்களுக்கும் காரணமான, சிவபெருமானைச் சென்று கூடும்.


பூரண சக்தியில் சிவன் கலந்திருப்பான்

பூரண சத்தி எழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாக்கினர்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே. – (திருமந்திரம் – 663)

விளக்கம்:
தியானத்தின் போது பூரண சக்தியானது இருபத்தோர் கூறுகளாகப் பெருகுகிறது. ஒவ்வொரு பங்கிலும் தங்கியிருக்கும் சக்தியானது எழுநூற்று அஞ்சு மடங்காகப் பெருகுகிறது. நாராயணன், பிரமன் முதலிய ஐவருக்கும் தலைவனான சிவபெருமான் சக்தியின் அனைத்துக் கூறுகளிலும் கலந்து விரிந்து இருக்கிறான்.


பிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்

கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்
பொட்டிட்டு நின்றது பூரண மானத. – (திருமந்திரம் – 662)

விளக்கம்:
வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்பூததமனி, மனோன்மணி ஆகிய ஒன்பது சக்திகள் இப்பிரபஞ்சத்தின் இயக்கதிற்குக் காரணமானவர்கள். இவர்களின் சக்தியாலேயே நாம் பிறவிக்கு ஆளாகிறோம். இந்நவசக்திகள் நமது ஆதாரத் தாமரையின் தண்டைப் பற்றி இருக்கின்றன. நாம் அட்டாங்கயோகத்தில் நின்று குண்டலினியை மேல் எழுப்பி பல தளங்கள் மேலே சென்று புருவமத்தியில் நிறுத்தினால் அங்கே பராசக்தியுடன் பொருந்தி இருக்கலாம். பராசக்தியுடன் பொருந்தும் போது அந்த நவசக்திகளான் வாமை, சேட்டை முதலியவற்றின் செயல் மட்டுப்படும். அதனால் நாம் அடுத்து வரும் பிறவிகளைத் தவிர்க்கலாம்.


யோகத்தினால் காமம் குரோதம் அழியும்

ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கேயுந் தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே. – (திருமந்திரம் – 661)

விளக்கம்:
மூலாதாரத்தில் இருந்து தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திற்கு ஓடிச்சென்று அங்கே சிவபெருமானை உணர்ந்தவர்கள் தமது நாடியுள் நாதத்தை உணர்வார்கள். சிவயோகிகள் அந்த யோகத்தினால் ஊறும் அமுதத்தை நுகர்ந்து இன்புறுவார்கள். இந்நிலையிலேயே தொடர்ந்து யோகம் பயின்று வந்தால் நமக்குள் இருக்கும் காமம், குரோதம் போன்ற பகைவர்கள் அழிவார்கள்.